பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் காலம் : தமிழ்நாட்டில், சங்ககாலத்துக்குப் பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றுள் முக்கியமானது சமய மாறுபாடு. கி. பி. மூன்று நான்காம் நூற்றாண்டுகளில் பெளத்தம் தலை தூக்கி நிற்க, ஐந்து ஆறாம் நூற்றாண்டிலும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சமணம் தழைத்தோங்கி நின்றது. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்கே பாண்டியனும் வடக்கே பல்லவனும் சமணம் போற்றும் பெருமன்னராகி, தாமே அச்சமயத்தைச் சார்ந்தவராக நின்றனர். அந்த வேளையில்தான் அப்பர் என்னும் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் தமிழ்நாட்டில் தோன்றினர். அவர்கள் வழியே தமிழ்நாட்டில் மீண்டும் சைவசமயம் தழைத்தது என்பது வரலாறு. இவர் வரலாற்றைச் சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் 1256 பாடல்களால் விளக்கியுள்ளார். அறுபத்து மூன்று நாயன்மாரைப் பாடும் (தொகை அடியாருடன் 72) பெரிய புராணம் முழுவதுமே 4286 பாடல்களாக அமைய இவர் வரலாற்றுக்கு மட்டும் சேக்கிழார் இத்தனைப் பாடல்கள் ஒதுக்கி உள்ளமை இவர்தம் ஏற்றத்தை விளக்குவதாகும், இவரது வரலாறு பெரியபுராணத்துள் இரண்டாம் காண்டத்துள் ஆறாவது. வம்பறா வரிவண்டுச் சருக்கத்தின் முதல் வரலாறாக அமைகின்றது. வரலாறு : திருஞானசம்பந்தர் சோழ நாட்டிலே (தஞ்சை மாவட்டம்) சீர்காழியிலே அந்தணர் குலத்திலே சிவபாத இருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் மகனாய்த் தோன்றினர். பிள்ளையார்' என்பது பிள்ளைத் திருநாமம் என்பர். இவரை முருகனது அவதாரம் என்றே கூறுவர்.