பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18 நல்வழிச் சிறுகதைகள்

என்றாவது ஒரு நாள் தலை வலிக்கிறது என்று படுக்க முடியாது; உடல் நோகிறது என்று ஒய்வெடுக்க முடியாது. வேலைக்குப் போகாமல் இருந்தால் கூலி கிடைக்காது. கூலியில்லாவிட்டால், வயிற்றுப் பசியைத் தணிக்க முடியாது. ஆகவே, அவன் பட்டினி இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், நாள் தோறும் ஒய்வில்லாமல் உழைக்க வேண்டியிருந்தது.

ஒரு முறை கண்ணனுக்கு நன்றாகக் காய்ச்சல் வந்து விட்டது. வேலைக்குப் போக முடியவில்லை. இருந்த பணம் முற்றிலும் வேலைக்குப் போய் வந்த அன்றே தீர்ந்து விட்டபடியால் மருந்து வாங்கக் கையில் காசில்லை.

காய்ச்சலோடு வீட்டில் படுத்துக் கிடைந்த கண்ணன், என்ன செய்வதென்று யோசித்தான்.

கண்ணன் வசித்த அதே தெருவில் நமசிவாயம் என்று ஒரு பெரியவர் இருந்தார். அவர் கண்ணன் தந்தைக்கு நல்ல நண்பர். ஊரில் அவரை நல்லவர் நமசிவாயம் என்றுதான் குறிப்பிட்டுப் பேசுவார்கள்.

கண்ணனுக்கு நமசிவாயத்தின் நினைவு வந்தது. ‘அவரிடம் போய் இரண்டு ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு வந்து மருந்து வாங்கிச் சாப்பிடலாம். பின்னால், கூலி கிடைக்கிற பணத்தில் அவர் கடனைத் திருப்பிக் கொடுத்துவிடலாம்’ என்று நினைத்தான்.