பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீராம்பல் பூ

செல்வனும் செல்வியும் ஒரு நாள் குளத்திற்குச் சென்றார்கள். குளத்தில் ஆம்பல் பூ பூத்திருந்தது. தண்ணீரின் இடையில் அது தலை தூக்கி நின்ற காட்சி அவர்கள் மனத்தைத் தொட்டது.

அப்போது வெயில் காலம். குளத்தின் நீர் நாளுக்கு நாள் வற்றிச் சுருங்கிக் கொண்டிருந்தது. பத்து நாள் கழித்து அவர்கள் குளத்தின் பக்கம் சென்றபோதும், அந்த நீராம்பல் தண்ணீரில் தலை தூக்கி நின்றது.

“செல்வீ, பார்த்தாயா ! பத்து நாளைக்கு முன் தண்ணீர் உயரத்தில் நின்ற போது, இந்த நீராம்பல் பூவும் உயரத்தில் நின்றது. இப்போது தண்ணீர் இறங்கிய பின், அதுவும் இறங்கி விட்டது!” என்றான் செல்வன்.

“செல்வா, அது மெல்லிய பூங்கொடிதானே ! அதனால் எப்படி நிமிர்ந்து நிற்க முடியும்? அதனால் தான் தண்ணிரோடு இறங்கி விட்டது!” என்றாள் செல்வி.