பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் ⚫ 77
 

யார் வீட்டிலாவது எலிகள் அட்டகாசம் செய்தால், உடனே சின்னத்தம்பிக்கு ஆள் அனுப்புவார்கள். அவன் தன் முதலாளியான குயவனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, அந்த வீட்டுக்குச் செல்லுவான். எலிகள் குடியிருக்கும் வளைகளையும், அவை வரும் வழிகளையும் ஆராய்வான். இரவில் அவை வந்து அட்டகாசம் செய்யும் அறைகளைப் போய்ப் பார்ப்பான்.

அன்று இரவே அந்த வீட்டுக்குச் செல்வான். கையில் சில தேங்காய்த் துண்டுகளைக் கொண்டு செல்வான். அவற்றை அறையில் அங்கொன்றும் இங்கொன்றும் போட்டு வைப்பான். ஒரு தடிக் கம்பை ஓங்கிப் பிடித்தபடி, ஒரு மூலையில் பதுங்கி உட்கார்ந்திருப்பான்.

தேங்காய் வாசம் மூக்கில் பட்டவுடன், எலிகள் ஆனந்தமாக அந்த அறைக்குள் ஓடிவரும். யாரும் இருக்கிறார்களா என்று இருட்டுக்குள்ளே கண்களை விழித்துப் பார்க்கும். ஒசை எதுவும் கேட்கிறதா என்று செவியைத் தீட்டிக் கொண்டு கவனிக்கும். சின்னத்தம்பி மூச்சு விடாமல், ஆடாமல் அசையாமல், மூலையில் உட்கார்ந்திருப்பான்.

யாரும் இல்லை என்று நிச்சயித்துக் கொண்டே எலி சுதந்திரமாகப் பாய்ந்து வந்து தேங்காய்க் கீற்றைக் கடித்து இழுக்கும். அவ்வளவுதான், கண் மூடிக் கண் திறப்பதற்குள் படீரென்று தடிக்கம்பு அதன் முதுகில் விழும். எலி நசுங்கிச் செத்துப் போகும்.