பக்கம்:நல்வழி நயஉரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துன்பம் மிகுக்கும் எனது வயிறே! இல்லாதபோது ஒரு நாள் உணவை விடு என்றால் விடாது கேட்பாய், உணவு நிரம்ப உள்ளபோது இரண்டு நாளுக்கு வேண்டியதைச் சேர்த்துஉண்டுகொள் என்றால் அதுவும் செய்யமாட்டாய்; எனவே, உன்னோடு காலம் தள்ளுதல் கடினம். (11)


ஆற்றங் கரையில் உள்ள மரம்போல, அரசர் அறிய ஆரவாரமாக வாழ்ந்த பெருவாழ்வும் ஒரு காலத்தில் வீழ்ச்சி அடையலாம். உழவுத் தொழில் செய்து உணவு கொண்டு வாழ்வதற்கு ஒப்பான வேறு உயர்வு இல்லை. வேறு தொழிலுக்கு இடையூறு ஏற்படலாம். (12)


வளமான இவ்வுலகத்தில், மேன்மேலும் முன்னேறுபவரை யாரும் தடுக்க முடியாது. அது இருக்கட்டும். இறப்பவர்களை யாரும் நிறுத்தி வாழவைக்க முடியாது. இறந்து உயிர் வாழ்பவரையும் யாரும் இரவாமல் இருக்கச் செய்ய இயலாது. இது மெய். (13)


சொல்லப் போனால், ஒருவரிடம் இச்சக மொழிகள் பல பேசி வலிய வாங்கி உண்பது, ஐயம் (பிச்சை) எடுப்பதற்கு மூத்த அண்ணன் போன்ற மட்டமான வாழ்க்கையாகும். சிச்சீ! வயிறு வளர்ப்பதற்காக மானத்தை விடாமல் உயிரை விடுவது மிகவும் பொருத்தமாகும். (14)


'சிவாயநம’ என்று உருவேற்றி இருப்பவர்க்கு எப்போதும் இடையூறு இல்லை. இந்த நல்வழியே அறிவுடைமையாகும். இது இல்லாத மற்றவை, விதிப்படி நேரும் அறிவு போன போக்காகும். (15)

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/14&oldid=1289756" இலிருந்து மீள்விக்கப்பட்டது