பக்கம்:நல்வழி நயஉரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவறான பாட்டைப் பாடுவதைவிட, வெற்றுப் பண்ணை (இராகத்தை) மட்டும் இசைத்துக் கொண்டிருப்பது நல்லது. உயர்ந்த குலத்தில் பிறந்து ஒழுக்கம் கெட்டவரைவிட, தாழ்குலத்தில் பிறந்தும் நல்லொழுக்கம் உடையவர் உயர்ந்தவராவர். அஞ்சி ஒடும் போர் வீரத்தைவிட, தீராப் பிணி மேலானது. பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியை விட தனி வாழ்வு நல்லது. (31)


பெரிய உலகத்தோரே! வெள்ளம் வடிந்தபின் ஆற்றில் காணப்படும் மேடு - பள்ளம் போல், செல்வம் குறையும்-கூடும். எனவே, ஏழைக்குச் சோறு போடுவீராக; தண்ணீரும் தருவீராக! இந்த அறத்தின் தொடர்பினால், உள்ள வளம் மேலும் உயர்ந்து பெருகும். (32)


யானைமேல் பட்டு ஊடுருவிச் செல்லும் அம்பு பஞ்சுக் குள்ளே பாய்ந்து செல்ல முடியாது. நீண்ட இரும்புக் கடப்பாரைக்கு அசைந்து கொடுக்காத கல்பாறை, பசுமையான மரத்தின் வேருக்கு நெகிழ்ந்து பிளவுபடும். இவைபோல், வன் சொற்கள் இனிய மென் சொற்களை வெல்ல முடியாது. (மென் சொல்லே பயன் தரும்) (33)


ஒருவன் படிக்காதவ னாயினும் கையில் பெருஞ்செல்வம் பெற்றிருப்பின், எல்லாரும் போய் அவனை வரவேற்பார்கள். படித்திருப்பினும், பொருள் இல்லாதவனை அவனுடைய மனைவியும் மதிக்கமாட்டாள்; மற்றும், பெற்று வளர்த்த தாயுங்கூட விரும்ப மாட்டாள் அவனது வாய்ச் சொல் எங்கும் செல்லுபடியாகாது. (34)


பூ தெரியாமலே காயாகும் அத்தி ஆல் முதலிய மரங்களும் உண்டு. யாரும் ஏவாதிருக்கவும் தாமே நிலையாய் உணர்ந்து நற்செயல் புரியும் மக்களும் உள்ளனர். தூவி விரைத்து பாடுபடினும் நன்கு விளையாத விதைகளைப் போல் மூடனுக்கு எவ்வளவு உரைத்து அறிவுறுத்தினும் நல்ல உணர்வு உண்டாகாது. (35)

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/22&oldid=1289764" இலிருந்து மீள்விக்கப்பட்டது