பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

43


விசாரித்ததைப் பற்றிப் பிரஸ்தாபித்து, வியாபாரிகள் அதிக லாபம் வைக்காமல் உணவுப் பொருளை ஏழை மக்களுக்கு நியாயமான விலைக்குக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

பிறகு தம்முடைய சாதன வாழ்க்கையைக் குறித்துச் சிறிது நேரம் பேசினார். "இம்மாதிரி வாழ்க்கை நடத்த ஒரு சிலரால்தான் முடியும். ஆகையால், என்னை யாரும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் நான் மகாத்மாஜியை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கண் மூடித்தனமாகப் பின்பற்றத்தான் செய்தேன். அதாவது, காந்திஜி பிரார்த்தனை வேளைகளில் கண்களை மூடித் தியானம் செய்தபோது நானும் அவரைப் பின்பற்றிக் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தேன்! இது கண்மூடித்தனமே அல்லவா? 

அன்றாட அலுவல்கள்

மகாத்மாஜியின் அன்றாட அலுவல்கள் என்னவென்பதைத் தெரிந்துகொள்வது தர்மாபூரில் சாத்தியமாயிற்று.

காலையில் மகாத்மாஜி யாத்திரை முடிந்து மற்றொரு கிராமத்துக்குச் சென்றதும் ஸ்நானத்துக்குத் தயாராகி விடுகிறார். கிராமங்களில் ஸ்நான அறை என்று பிரத்தியேகமாக ஏதும் கிடையாதாகையால் போகுமிடங்களிலெல்லாம் திரைகள் கட்டி ஸ்நான அறை தயார் செய்துவிடுகிறார்கள். மகாத்மாஜி அந்த விடுதிக்குள் சாவதானமாக ஸ்நானம் செய்கிறார். பின்னர், சற்று நேரம் பத்திரிகைகளைப் படிக்கச்-