பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

நவகாளி யாத்திரை


இரண்டு நிமிஷ நேரம் ராம நாம பஜனை நடத்தினார். ஐந்து நிமிட நேரம் ஹரிஜன நிதிக்குப் பணம் வசூல் செய்தார்.

ஏற்கெனவே குறிப்பிட்ட இடங்களைத் தவிர, ரயிலை அதிகப்படியாகச் சில இடங்களிலும் நிறுத்தும்படி ஆயிற்று. சாத்துக்குடல் என்ற கிராமத்தில் ரயில் நிற்காது என்று தெரிந்தும்கூட அந்த ஊரைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹரிஜனங்கள் மகாத்மாஜியின் படத்தை விமானத்தில் வைத்து உற்சவ விக்ரகம்போல் ஜோடித்துக் கோவில் குடையைப் பிடித்துக் கொண்டு வந்திருந்தார்கள். (அப்போது அவர்களுக்கிருந்த உற்சாகத்தில் மகாத்மாஜி தலைமீது சுரீரென்று அடித்த வெயிலைக்கூட யாரும் கவனிக்கவில்லை!) மகாத்மாஜி அந்தக் காட்சியைக் கண்டதும் வண்டியை நிறுத்தச் சொல்லி அங்கே ஒரு நிமிஷ நேரம் ரயில் வண்டியின் ஓரத்தில் இணைத்திருந்த பிளாட்பாரத்தில் வந்து நின்று தரிசனம் தந்தார்.

ரயில் ஓடும்போது, பாதைக்கு இருபுறங்களிலும் வழிநெடுக ஜனங்கள் வரிசை வரிசையாக நின்று காண்டிருந்தார்கள். கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். பனை மரங்கள், புளிய மரங்கள், கைகாட்டி மரங்கள், தந்திக் கம்பங்கள் மீதெல்லாம் ஏறி நின்று மகாத்மாஜியின் தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். மேலே வெயிலென்றும், கீழே வெள்ளமென்றும் பாராமல் கால் கடுக்கக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

காந்திஜி வண்டிக்கும், பத்திரிகை நிருபர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த எங்கள் வண்டிக்கும்