பக்கம்:நாகப்பட்டினம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் நகர்

பதிப்புச் செம்மல் தமிழவேள் டாக்டர் ச. மெய்யப்பன்

தமிழ் நிலம் தொன்மையானது. நீண்ட நெடிய வரலாறு உடையது. வரல்ாற்றுக் காலந்தொட்டே பூம்புகார், மதுரை சிறப்புப் பெற்றுள்ளன. நகரங்களின் சிறப்புக்களைச் சங்க இலக்கியம் அழகோவியமாக்கி உள்ளது. பல்வகைச் சிறப்புக்களை உடைய தலைநகரங்கள், துறைமுக நகரங்கள், வணிக நகரங்கள் பற்றிய பல குறிப்புக்கள் இலக்கியங்களில் உள. தமிழர்கள் நகரமைப்பில் தனித்திறம் சான்றவர்கள். சிந்துவெளி நகர அமைப்பிற்கும் சங்ககால நகர அமைப்பிற்கும் பல்வகை ஒற்றுமைகளை ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.

பழம்பெருமையுடைய நகரங்கள் மட்டுமல்லாமல் இன்றும் வாழும் நகரங்களைப் பற்றி ஒரு வரிசை வெளியிடும் திட்டத்தில் முதன்முதலில் கடல் நாகையைப் பற்றிய அரிய ஆய்வேடு மலர்கிறது. சிதம்பரம், திருவாரூர், திருச்செங்கோடு முதலிய நகரங்கள் இன்றும் வாழும் திருநகரங்களாகும். வரலாற்று இடையீடின்றி ஒளி குன்றாது ஓங்கி வளரும் நன்னகரங்கள் அறிமுகப்படுத்தும் வரிசையில் நாகை வரலாறு முகிழ்க்கிறது. -

கோவில்களின் பெருமையைச் சொல்லும் தல வரலாறுபோல் நூல் அமைக்கப்பெறவில்லை. தொல் பழங்காலந்தொட்டு நகர் உருவான வரலாறு தொடங்கி அரசுகளின் எழுச்சிக் காலத்தில் நகர் பெற்ற ஏற்றமும் நகரின் பல்வகை நலங்களும் பன்முகச் சிறப்புக்களும் வகுத்தும் தொகுத்தும் உரைக்கப்பட்டுள்ளன. -

நாகையின் தனிச்சிறப்பு துறைமுக நகர். கிழக்குக் கடற்கரையில் கடல் வாணிகத்தின் வாயில். தமிழகத்தின் மையத்தில் அமைந்த நடுநாயகமான துறைமுகம். பன்னாட்டினரின் கடல் வணிபச் சுவடுகள் நிரம்பப் பதிந்துள்ளன. வணிகக் கப்பல்களின் போக்குவரவும் ஏற்றுமதி இறக்குமதி பற்றிய செய்திகளும் நிரம்ப உள. தமிழர் கடல் வணிகத்தில் நாகபட்டினத்தின் பங்களிப்பு சங்ககாலந்தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி வரை கிழக்காசிய நாட்டுப் பயணத்திற்கு வாயிலாக அமைந்துள்ளது.

எல்லா நகரங்களுக்கும் வரலாறு அமைவது அரிது. சில நகரங் களுக்குச் சில வரலாற்று நிகழ்வுகளே உண்டு. நாகைக்கு வற்றாத வரலாற்றுப் பெருமை உண்டு. வரலாற்று எச்சங்கள் பல கிடைத்துள்ளன. தொடர்ந்த வரலாறு உள்ள நகரங்களில் நாகை ஒன்று. பல்வேறு சமயங் களின் சங்கமம். சைவ, வைணவ, பெளத்த சமயங்களின் பழஞ்சுவடு களும் கிறித்தவ, இசுலாமியச் சமயங்களின் புதிய பதிவுகளும் நாகையில் கொஞ்சநஞ்சமல்ல. திருக்கோயில் கல்வெட்டுக்கள், நாகையில் சமயங்கள், எழுந்து வீழ்ந்த வரலாறுகளை இயம்புகின்றன. சமய இலக்கியங்களில் குறிப்பாகத் தேவார திருமுறைகளில் இடம் பெற்றுள்ளன. தமிழகச் சமயப் பொறைக்கு நாகை நல்ல எடுத்துக்காட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/5&oldid=584890" இலிருந்து மீள்விக்கப்பட்டது