பக்கம்:நாடகத் தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ததேயாம் எனத் தோற்றுகிறது, ராஜராஜ சோழன் காலத்தில்தான் நமது தமிழ்நாடானது சண்டைச்சச்சரவு அதிகமின்றியிருந்ததெனக் கூறலாம். அதற்குமுன் தமிழ்நாட்டில் மூவேந்தர்களுடைய முரணே பெரிதாயிருந்தது. அதற்கப்புறம் களேபரர், பல்லவர், சளுக்கியர்கள் முதலியோர் தமிழ்நாட்டிற்குட்புகுந்து ஓயாது ஒருவர் மாறி ஒருவர் சச்சரவிட்டுக்கொண்டிருந்த விஷயம் சரித்திர ஆராய்ச்சியால் நாம் அறிகிறோம், சில வருடங்களில் தமிழ்நாட்டில் இன்ன அரசர் ஆண்டனர் என்பதே அறியக்கூடாதபடி குழப்பமாயிருந்தது என்றும் தெரிகிறோம். போதாக்குறைக்கு பொன்னியம்மன் குறை என்கிறபடி, சற்றேறக்குறைய 600 வருடங்களுக்குமுன் வடக்கிலிருந்த மகம்மதிய அரசர் தெற்கே படையெடுக்க ஆரம்பித்தனர். அவர்களுக்குப் பிறகு விஜயநகர அரசாட்சி வந்தது, கடைசியாக பிரெஞ்சுக்காரர்களும் தற்காலத்திப் பிரிட்டிஷ் துரைத்தனத்தாரும் வந்தனர்.

சற்றேறக்குறைய 1857 வருஷம் காலஞ்சென்ற மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணி இந்தியாவின் அரசுரிமை ஏற்ற நாள் முதல்தான் தமிழ்நாடானது சண்டைச் சச்சரவின்றி வாழத் தலைப்பட்டதெனக் கூறலாம், அதுவரையில் அநேகம் அரசர்கள் மாறி மாறி ஆண்டுவந்த நமது தமிழ்நாட்டில், நமது பூர்வீகமான ஓலைப்புஸ்தகங்களைப் பரிவுடன் பாதுகாப்பது கடினமாயிருந்தது ஓர் ஆச்சரியமன்று; ஒர் குடியானவன் தன் குடும்பத்தின் ஜீவாதாரத்திற்கு வேண்டிய தான் விதைத்த நெல்லையே அறுவடை செய்து தான் அனுபவிப்பது சந்தேகமாயிருந்த காலங்களில் கல்விப் பயிற்சியின் பொருட்டு. கலைகளை ஓத அவனுக்குக் காலம் எப்படி வாய்த்திருக்கும்? ஆகவே. நாடகக்கலையுட்பட நமது கலைகள் அடங்கியிருந்த, பாதுகாப்பதற்கரிதான ஓலைப்புஸ்தகங்கள், பெரும்பாலும் அழிந்துபோனது ஓர் வியப்பன்று. சில புஸ்தகங்களாவது இப்பொழுது பிழைத்திருக்கின்றனவே என்றே நாம் ஆச்சரியப்பட வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் நாம் முக்கியமாக பதில் அளிக்கவேண்டிய ஒரு கேள்வி உண்டாகின்றது. அக்கேள்வி பூர்வீக கிரந்தங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/34&oldid=1473928" இலிருந்து மீள்விக்கப்பட்டது