பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

31


பிடித்தபோதிலும், இவ்வருஷம் எங்கள் சபைக்கு 191 அங்கத்தினர் புதிதாகச் சேர்ந்தபடியால் சபைக்குப் பொருள் நஷ்டமின்றிச் சமாளித்தோம். மாதாந்தரக் கட்டணத்தை அதிகப்படுத்தினால் எங்கள் அங்கத்தினர் குறைந்து போவார்களோ என்று நான் பயந்திருந்ததற்கு, இதுவரையில் எந்த வருஷமும் இல்லாதபடி, அதிகமாகப் புதிய அங்கத்தினர்கள் சேர்ந்தனர்! இது எங்கள் சபையின் அதிர்ஷ்ட மென்றேனும், தெய்வ கடாட்சமென்றேனும் அவரவர்கள் இஷ்டப்படி எண்ணிக்கொள்ளலாம். இது முதல் எல்லா விஷயங்களிலும் சபையானது அபிவிருத்தியடைய ஆரம்பித்தது என்றே கூறவேண்டும். ஒரு டென்னிஸ் கோர்ட்டாயிருந்ததை, இரண்டாக்கி, பிறகு மூன்றும் ஆக்கினோம். இது முதல் வருஷத்திற்கு இருபத்தைந்து முப்பது நாடகங்கள் கொடுக்கத் தலைப்பட்டோம். இது முதல் சபா தினக் கொண்டாட்டமும், தசராக் கொண்டாட்ட மும் மிகவும் பலப்பட்டன; சபை தினக் கொண்டாட்டத்தைச் சார்ந்த வனபோஜனத்திற்கு (Picnic) இவ்வருஷம் 200 பெயர் வந்திருந்தனர். தசராக் கொண்டாட்டத்தில், விக்டோரியா ஹால் கீழ்ப்பக்கம் முழுவதும் சிற்றுண்டிக்காக ஏற்படுத்தி, மேல் மாடியில் நாடகங்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகவே எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்குமிடத்து, இவ்வருஷம், எங்கள் சபையின் சரித்திரத்தில் மிகவும் முக்கியமானதென்றே கருதல் வேண்டும்.

இவ்வருஷம் நான் எழுதிய புதிய நாடகம் “பொன் விலங்குகள்” என்பதாம். இதுதான் நான் முதல் முதல் எழுதிய சோஷல் நாடகம் (Social drama). சோஷல் டிராமா என்பதைச் சரியாகத் தமிழ்ப்படுத்த அசக்தனாயிருக்கிறேன்; ஒருவாறு ஜன சமூக நாடகம் அல்லது பொதுஜன நாடகம் என்று கூறலாம்; ஆயினும் அவ்விரண்டு பதங்களும் எனக்குத் திருப்திகரமாயில்லை. இதை வாசிக்கும் நண்பர் யாராவது இந்தச் சோஷல் என்கிற பதத்திற்குச் சரியான தமிழ்ப் பதம் கூறுவார்களாயின் அவர்களுக்கு நன்றியறிதலுடையவனாயிருப்பேன். இத்தகைய நாடகங்கள், ராஜாக்கள் தேவதைகள் முதலியவர்களைப்பற்றிக் கூறாது, பொது ஜனங்கள் அல்லது தற்கால ஜனங்களைப் பற்றிக் கூறுவதாகும். இதை நான் எழுத நேரிட்ட காரணம் அடியில்