பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

நாடக மேடை நினைவுகள்


பார்த்து இது என்ன சமாச்சாரம் என்று கேட்க, அவர் “இது உங்களுக்குத் தெரியாதா? இங்கெல்லாம் பத்து ரூபாய் நோட்டுகள்தான் சாதாரணமாக வழங்குகிறது. ஆகவே, 60 என்றால் அறுநூறு ரூபாய் என்று அர்த்தம்; எழுபது என்றால் எழுநூறு ரூபாய் என்று அர்த்தம்; நூறு என்றால் நூறு பத்து ரூபாய் நோட்டுகளாகக் கணக்குச் செய்து கொள்ள வேண்டும்!” என்றார். ஆனால் சரிதான் என்று அதனுடன் அதை விட்டோம். அச்சமயம் நானாவது எனது நண்பராவது, எங்கள் சபை இவ்விடம் வந்து நாடகங்கள் ஆடக் கூடும் என்று கனவிலும் நினைத்தவர்களல்ல. அச்சமயம் தூத்துக்குடியிலிருந்து, கப்பல் மூலமாகக் கொழும்பு வந்து சேர, ஓர் இரவெல்லாம் நாங்கள் பட்ட கஷ்டத்தை நினைத்துக்கொண்டு, இது எங்கள் சபைக்குச் சாத்தியமான காரியமல்லவென்று கைவிட்டோம். இதற்கப்புறம் இரண்டு வருஷங்கள் வரையிலும் இதைப்பற்றி ஒருபோதும் நினைத்தவர்களல்ல.

பிறகு இவ்வருஷம் (அதாவது 1911) ஏப்ரல் மாதத்திலோ என்னவோ, ஒரு நாள் எங்கள் சபை நிர்வாக சபைக் கூட்டத்தில், எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், தன் வழக்கப்படி, “என்ன சம்பந்தம்! நம்முடைய சபை ஏதாவது புதியதாய்ச் செய்யவேண்டும். வெறுமையாகப் போட்ட நாடகங்களையே போட்டுக் கொண்டிருப் பதில் என்ன பிரயோஜனம்?” என்று சொன்னார். அதன் மீது அவருக்குப் பதில் சொல்ல வேண்டுமென்று விரும்பினவனாக, வேடிக்கையாக, ‘இந்த வருஷம் நமது சபை சிங்களத்துக்குப் போய் நாடகமாட வேண்டும்!” என்று சிரித் துக்கொண்டே பிரேரேபித்தேன். உடனே ரங்கவடிவேலு தான் ஆமோதிப்பதாகச் சொல்ல, அங்கிருந்தவர்களெல்லாம், ஸ்ரீநிவாச ஐயங்கர் உட்பட, மிகவும் நல்லது என்று குதூஹலத்துடன் ஒப்புக் கொண்டனர்! நான் இதைப்பற்றிப் பிரேரேபித்தபோது வேடிக்கைக்காகச் சொன்னேனேயொழிய, கொஞ்சமாவது இது சாத்தியமான காரியம் என்று நினைத்துச் சொன்னவனே அன்று. அதன்பேரில், நான் வேடிக்கைக்காகச் சொன்னேன், இது அசாத்தியமான காரியம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும், அனை வரும், “அதெல்லாம் உதவாது, நீதானே சொன்னாய். ஆகவே