பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

530

நாடக மேடை நினைவுகள்




தவறாக எண்ணிக்கொள்ளுவார்களே என்று அஞ்சாது, தன் மனத்தில் தோன்றிய ஆட்சேபணையை வெளியிட்டார். அவர் செய்ததுதான் நியாயம், நான் செய்தது தவறு என்று நான் ஸ்பஷ்டமாய் ஒப்புக்கொள்ள வேண்டியவனே; எப்படிப்பட்ட விஷயத்திலும், நமது மனத்திற்கு எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களே என்று அஞ்சாது, வெளியிட வேண்டியதுதான் கிரமம் என்னும் புத்தி அப்பொழுது எனக்கில்லாமற் போயிற்று. முடிவில் எங்கள் நிர்வாக சபையார், பிரேரேபித்தவர் இவ்வளவு சொல்கிறாரே என்று அவர் வார்த்தையை நம்பி இந் நாடகத்தை மறுமுறை இவ்விடம் நடத்த வேண்டுமென்று தீர்மானம் செய்தனர். அதற்காக உடனே வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தோம். அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்கெல்லாம் அவர் வேண்டியபடி நாடகப் பத்திரிகைகள் அனுப்பி னோம். நாடகத்தை சாயங்காலத்தில் வைத்துக்கொண்டால் அதிக ஜனங்கள் வருவார்கள் என்று அவர் கூறியபடி சாயங்காலத்திலேயே வைத்துக்கொண்டோம். இவை அனைத்தும் செய்தும், அன்று சாயந்திரம் 5 மணிக்குச் சிறிது முன் பிள்ளையார் பாட்டை, எங்கள் வழக்கப்படி பாடி முடிந்தவுடன், என் வழக்கத்திற்கு விரோதமாக, டிராப் படுதாவை கொஞ்சம் நீக்கிப் பார்க்க, நாடக சாலையில் நாடகத்தைப் பார்க்க இரண்டு பெயர் உட்கார்ந்திருந்தனர்! இதை மற்ற ஆக்டர்களும் அறிந்தவர்களாய், எங்கள் சபையின் சட்டத்திற்கு விரோதமானாற் போகிறது, எப்படியாவது ஜனங்கள் வந்தாற் போதுமென்று சொல்லி, குறித்த மணிக்கு அரை மணி பொறுத்து நாடகத்தை ஆரம்பித்தும் அதிகம் பயன்படவில்லை. சிலர்தான் நாடகம் பார்க்க வந்தனர். எங்கள் சபையின் நாடகங்களுக்குள் ஒரு சிறந்ததான இந் நாடகத்திற்கு, இம்மாதிரியாக மிகவும் குறைந்த வசூலானது இதுவரையில் எப்பொழுதுமில்லை; அதன் பிறகும் நாளதுவரையில் இல்லை. தெலுங்கு தேசமாகிய நெல்லூரில் இந்நாடகத்திற்கு வசூலானதைவிட, இன்று குறைவாயிருந்தது. மயூர்நாதர், தற்புகழ்ச்சியாக வீம்பு பேசிய எனது நண்பருக்கு புத்தி வர வேண்டும் என்று இவ்வாறு செய்து வைத்தனர் போலும். அந்நாள் முதல் இந்நாள் வரை அந் நண்பர் தான் ஆடும் நாடகங்களைப்