பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

544

நாடக மேடை நினைவுகள்




கருணையினால் தப்பினேன் என்று நம்புகிறேன். கோயிலுக்குப் போகுமுன் கை கால்களைக் கழுவிக்கொண்டு அநுஷ்டானம் செய்வதற்காக அங்கருகிலுள்ள ஒரு சிற்றாறுக்கு எல்லோரும் போனோம். அவ்விடம் ஒரு பாறையில் பக்கப்படி வழியாக இறங்கி, அற்பசங்கைக்காக உட்கார்ந்தேன். நான் எழுந்திருக்கும் பொழுது திரும்பிப் பார்க்க என் காலுக்கு ஓர் அடிக்குள்ளாக ஒரு பெரிய நல்லபாம்பு இருக்கக் கண்டேன்! தெய்வாதீனத்தால் அதன் வாயில் ஒரு தவளையைப் பற்றிக்கொண்டிருந்தது. இல்லாவிடில் அதனால் நான் கடிக்கப்பட்டிருப்பேன் என்று நிச்சயமாய் நம்புகிறேன். உடனே நான் எனது நண்பர்களைக் கூவியழைக்க அவர்கள் ஓடி வந்தனர்; நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அத் தவளையைக் கவ்விக்கொண்டே, அப் படிக்கட்டிலுள்ள ஒரு பொந்தில் அது நுழைந்தது. குறைந்த பட்சம் ஆறடி யிருக்கும் அதன் நீளம். எனது நண்பர்களெல்லாம் இப் பாம்பு உன்னைக் கடித்து நீ இறந்திருந்தால் என்னாவது என்று கலங்கினார்; அம்மட்டும் அந்த ஹானி நேரிடாமல் தப்பினாயே என்று சந்தோஷப்படாதவர் ஒருவருமில்லை.

என் நண்பர்களுக்கு என்மீதில் உண்மையிலுள்ள அன்பு அப்பொழுதுதான் எனக்கு முற்றிலும் வெளியாயது. “கேட்டினு முண்டோர் உறுதி, கிளைஞரை நீட்டியளப்ப தோர் கோல்” என்னும் தெய்வப் புலமை திருவள்ளுவர் குறள் எனக்கு நினைவிற்கு வந்தது. உடனே பேரூர் அம்பலம் சென்றபொழுது, பாம்பணிநாதன் பாதத்தினைப் பணிந்து, எங்கள் சபைக்காக இன்னும் சில வருடங்கள் உழைக்க வேண்டி என்னைக் காத்த அவரது பெருங் கருணையைத் துதித்தேன்.


நான்காம் பாகம் முற்றிற்று