பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

720

நாடக மேடை நினைவுகள்


சுந்தரேஸ்வராள், பூர்ணாயுசும் சகல ஐஸ்வர்யத்துடன், இவளது கலை ஞானத்தை மெச்சும்படியான தக்க கணவனையும் கொடுப்பார்களாக என்று பிரார்த்திக்கிறேன்.

இச் சந்தர்ப்பத்தில் நமது தென் இந்திய நாடக மேடை மீது ஸ்திரீகள் நடிப்பதைப்பற்றி என் அபிப்பிராயத்தை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இதைப்பற்றி எனது அபிப்பிராயம் என்னவென்று பல நண்பர்கள் பன்முறை கேட்டிருக்கிறபடியால், சற்று விவரமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் சென்னை சர்வகலாசாலையார் (University) உத்தரவின்படி, பச்சையப்பன் கல்லூரியில், “நாடகத் தமிழ்” என்பதைப் பற்றி மூன்று நாள் உபன்யாசம் செய்தேன்; இதைப் புஸ்தகமாக அச்சிட்டிருக்கிறேன். இது சம்பந்தமாகப் பூர்வகாலத்தில் தமிழ் நாடகங்களிலிருந்த ஸ்திதியைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டி வந்தது. அந்த ஆராய்ச்சியை யெல்லாம் இங்கு நான் எழுதுவது மிகையாகும். ஆயினும் அந்த ஆராய்ச்சியில் நாடக மேடைக்கும் ஸ்திரீகளுக்கும் உண்டாயிருந்த சம்பந்தத்தை மாத்திரம் இங்குச் சுருக்கி எழுதுகிறேன்.

இன்றைக்குச் சுமார் 1800 வருடங்களுக்குமுன் தென் இந்தியாவில், தமிழ் நாடகங்கள் ஆடப்பட்டன என்பற்குச் சந்தேகமில்லை. அன்றியும் அவற்றுள் பெரும்பாலும் ஸ்திரீகள் நடித்தனர் என்பதும், சிலப்பதிகாரம் முதலிய நூல்களினால் விளங்குகிறது. அக் காலத்தில் நாடகங்களில் ஆடிய ஸ்திரீகள் விலைமாதராயிருந்தனரென்பதும் நன்கு விளங்குகிறது. தமிழ் நாட்டில் அரச குல ஸ்திரீகளும் உயர்குல ஸ்திரீகளும், வடப்பிரதேசத்திலிருந்தது போல் நாட்டியம் அல்லது நாடகமாடக் கற்றனர் என்பது கொஞ்சமேனும் விளங்கவில்லை. தமிழ் நாடகமானது க்ஷணதிசையை அடைந்ததற்கு ஒரு முக்கியக் காரணம் இதுவாயிருக்கலாமென்று தோன்றுகிறது; பிறகு சரித்திர காலத்துக்கு வருங்கால “ராஜராஜேஸ்வரி” நாடகம் முதலியன ஆடியவர்கள் பெரும்பாலும் ஆண் மக்கள் என்று அறிகிறோம். அக்காலத்தில் சில கோயில்களில் தாசிகள் திருவிழாவின் போது நாடகங்களாடியதாக அறிகிறோம் (இவ்வழக்கம் சில