பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184 ♦ நான் கண்ட பெரியவர்கள்


உயரமாக தூக்கிக் கொண்டிருக்கும். பெண்களுக்கு அவ்வாறு இருக்காது. கடைசி யாத்திரையின்போது தாம் படுத்திருப்பது யாருடைய மடியில் என்பதை அறிந்துகொள்ள அந்த மாமனிதர் கையாண்ட வழி இது. காலை 8மணி ஆயிற்று. அம்மையார் அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ’இங்கிருந்து 7 மைல் தூரத்தில் படைகள் தங்கியிருக்கும் பாடி வீடு ஒன்று உள்ளது. அங்கே சென்று அதன் தலைவரைப் பார்க்க வேண்டும். இவர் பெயரைச் சொல்லி இவரிடமிருந்து வருவதாகச் சொன்னால் உடனே ஏற்பாடு செய்வார்கள். நீங்கள் சென்று பிரதம மந்திரியை Wireless மூலம் கூப்பிட்டு நீங்கள் நடந்ததைச் சொல்லி ஒரு விமானத்தை அனுப்புமாறு சொல்லுங்கள். எவ்வளவு விரைவில் வருகிறதோ அவ்வளவு நலம்’ என்றார். கந்தையாவின் செல்வாக்குக் கொடிகட்டிப் பறந்த நேரம். அந்தப் பாடிவீட்டின் இராணுவத் தலைவர் என்னை வரவழைத்தார். பிரதம மந்திரியுடன் wirelessஇல் பேச ஏற்பாடு செய்து என்னிடம் தந்துவிட்டார். பிரதமரின் தனி அலுவலர் நான் சொல்வதைக் கேட்டு உடனே பிரதம மந்திரியிடம் டெலிபோனைத் தந்துவிட்டார். நடந்ததைக் கூறியதைக் கேட்ட பிரதம மந்திரி சேனநாயகா “அவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்! அந்த மருத்துவ இளைஞர் என்ன சொன்னார்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்டார். “ஐயா, ஒரு கடுகு அளவுகூட நம்பிக்கையில்லை. எந்த நிமிடம் முடிவு வரும் என்று சொல்வதற்கில்லை” என்றேன். “இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் என் தனி விமானம் அங்கே வரும்” என்று கூறினார். நான் வீடு திரும்பிக் கந்தையாவை மடியில் வைத்துக்கொண்டு, அம்மையாரிடம் நடந்ததைச் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே அந்த மாமனிதரின் ஆன்மா கேலிச்சரத்தான் திருவடி சென்றுவிட்டது.