பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 ♦ நான் கண்ட பெரியவர்கள்


விளையாடிக்கொண்டிருந்த நான் ‘சைனா புரூட்’ என்று கத்திவிட்டேன். எனக்கும் அப்போது brute என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாது. ஆனால், இவர்களைக் கண்டால் அப்படிக் கத்துகிற வழக்கம் அன்று உண்டு. என் சத்தத்தைக் கேட்ட அவன் தன் கையில் வைத்திருந்த பெரிய தடியால் திண்ணைமேல் இருந்த என்னை நோக்கி அடிக்கத் தொடங்கினான். ஆனால், அந்தத் திண்ணையில் இருந்த தூண் எனக்கு முன்னர் இருந்தமையின் அந்த அடிகள் என்மேல் விழவில்லை. தெருவில் இருந்தோர் அனைவரும் கூடி அவனைப் பிடித்து, அவன் கையில் இருந்த தடியைப் பிடுங்கிவிட்டனர். ஏகக் கூச்சலும் குழப்பமும்; ஒரு பதினைந்து அல்லது இருபது நிமிடங்களுக்குமேல் ஐம்பது அறுபது பேருடைய இரைச்சல், ஒரு தினுசாக எல்லாம் அடங்கி, அவரவர் இடத்திற்குப் போய்விட்டனர். இந்த ரகளையின் தொடக்கத்திலிருந்து முடிகின்றவரையில் ஆறடி தூரத்திலிருந்து எழுதிக் கொண்டிருந்த ஐயா அவர்கள் காதில் எதுவுமே விழவில்லை. அவர்கள் மனைவியார் வந்து, அவர்கள் எழுதிய தாள்களைக் கையில் எடுத்துக்கொண்டு “இவ்வளவு அநியாயம் எதிரில் நடக்குது, பேசாமல் இருக்கிறியள” என்று சத்தமிட்டபிறகுதான் ஐயா அவர்கள் இந்த உலகிற்கு மீண்டார்கள். “என்ன நடந்தது” என்று அமைதியாகக் கேட்டார்கள். அம்மா அவர்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் நடந்தவற்றையெல்லாம் கூற, “அப்படியா?” என்று கேட்டுவிட்டு மறுபடியும் எழுத்துப் பணியில் மூழ்கிவிட்டார்கள். அவர் மகன் உட்பட எங்கள் அனைவருக்கும் ஐயாவின் செய்கை பெரு வியப்பை அளித்தது. அப்படி இருந்த அவர்களுடைய மனநிலை எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் சிறுவர்களாகிய எங்களிடம் அப்போது இல்லை.

இதன்பிறகு பத்து ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஐயா அவர்களும் பழைய வேலையை விட்டுவிட்டு