பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் ♦ 63


வீட்டுக்கு அனுப்புங்கள்” என்றார். காவல் நிலையம் போகாமல் துணைவேந்தர் இல்லத்திற்குச் சென்றேன். உடனே, அவர் பணத்தைக் கொடுத்துப் பல்கலைக்கழக அலுவலகத்தில் கட்டுமாறு பணித்தார். இது அந்த மாமனிதரின் மற்றொரு பகுதி.

சென்னைக்கு வந்து வேலை பார்க்கத் தொடங்கினேன். தங்கசாலைத் தெருவில், டாக்டர் தருமாம்பாள் அம்மாள் வீட்டின் பக்கத்தில் ஒரு சிறு பகுதியில் குடியிருந்தேன். 1940 செப்டம்பர் 13ஆம் தேதி, ஆவணி கடைசி நாளுக்கு இரண்டு நாள் முற்பட்ட நாள் என்பதறிந்தேன். 15க்குள் (ஆவணி 30க்குள்) திருமணம் நடைபெறாவிட்டால் தந்தையார் தடுத்துவிடுவார் என்ற அச்சம் மிகுந்திருந்தது. சின்னையா (திரு.வி.க.) அவர்களிடம் சென்று இராஜம்மாளை அழைத்துக்கொண்டு வந்து திருமணம் செய்துகொள்ளப் போவதைச் சொல்லிவிட்டு அண்ணாமலை நகர் விரைந்தேன். மகளிர் விடுதியில் தங்கியிருந்த இராஜம்மாளை அழைத்துச் செல்ல எனக்கு எவ்வித உரிமையும் இல்லை. விடுதித் தலைவரும் என் சொற்களை நம்பவில்லை. வழக்கம்போல் துணைவேந்தரிடம் வந்து நடந்தவற்றைக் கூறி, இன்று அவள் என்னுடன் வராவிட்டால் திருமணம் நடைபெறாது என்பதை அறிவித்தேன்.

என்னை நன்கு அறிந்திருந்த துணைவேந்தர் மகளிர் விடுதிக் காப்பாளரைத் தொலைபேசியில் அழைத்து “மங்களம்! (விடுதிக்காப்பாளர்) இராஜம்மாளை இவனுடன் அனுப்பிவிடு. திருமணத்தை முடித்துக்கொண்டு ஒரு வாரத்தில் கொண்டுவந்து விட்டுவிடுவான். இது என்னுடைய ஆணை” என்று கூறினார். அன்று இரவே அவளை அழைத்துக்கொண்டு வந்து 1940 செப்டம்பர் 15 அன்று தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டேன். அக்கினி வளர்த்து, ‘வேயுறு தோளிபங்கன், மண்ணில் நல்ல