பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

நம்பிக்கையும் ஆபத்தை விளைக்கும். அது மூளையை மந்தப்படுத்தி, மனிதனைப் பிற்போக்காளனாக மாற்றி விடுகிறது. தான் உண்மை நாடுவோன் என்று உரிமைப் பாராட்டிக் கொள்ளும் எந்த மனிதனும் பழைய நம்பிக்கை முழுவதையும் போட்டிக்கழைத்தாகவேண்டும். பழைய நம்பிக்கையால் ஆராய்ச்சிக்கு ஈடுசெய்ய முடியாவிட்டால், அது நொறுங்கி தவிடு பொடியாகிவிடும். எனவே, அவனுடைய முதற்கடமை, அதனைச் சின்னாபின்னமாகச் சிதறியடிப்பதன்மூலம், புதிய தத்துவத்தை நிலைநிறுத்துவதற்கான நிலத்தைச் செப்பனிடுவதாகும். இது அழித்தல் வேலை. இதன் பிறகுதான் ஆக்கல் வேலையின் ஆரம்பம் இந்தப் புனருத்தாரனத்திற்குப் பழையவற்றில் சிலவற்றை சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளவும் செய்யலாம்.

தத்துவ சாஸ்திரத்தின் சாரம்

என்னைப் பொறுத்த வரையில். இந்த விஷயத்தைப் பற்றி பழமையிலிருந்து அதிகமாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை ஆரம்பத்திலேயே ஒப்புக்கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். கீழ்நாட்டுத் தத்துவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமென அளவுகடந்த ஆர்வம் எனக்கிருந்தது. ஆனால், அதற்கான சமயமோ, சந்தர்ப்பமோ என்னால் பெற முடியவில்லை. ஆயினும், அழித்தல் வேலையை—கடவுள் இல்லையென்னும் நாஸ்திகக் கொள்கையை விவாதிக்கப் போதிய அளவு பழைய கொள்கையான மதத்தின் பூரணத்துவத்தைப் பற்றிய சந்தேகாஸ்பதமான கேள்விகளைக் கேட்கத் தக்கவாறு என்மனம் மாற்றமடைந்து இருக்கிறது. பிரபஞ்சத்தை இயக்கி, தனது ஆக்ஞா சக்கரத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கும் நன்னறிவோடு கூடிய முழுமுதற் பொருள் (கடவுள்) ஒன்று இல்லை என்று நான் உணர்ந்துகொண்டு வந்திருக்கிறேன். நாம் இயற்கையில் நம்பிக்கை வைக்கிறோம். முன்னேற்ற இயக்கம் முழுவதும், மனிதன் தனக்கு ஊழியஞ் செய்வதற்காக இயற்கையை அடக்கி ஆதிக்கம் செலுத்துவதில் குறிக்கொண்டிருக்கிறது. ஒரு ‘சின்மய’ சக்தி பின்னாலிருந்து இயற்கையை