பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


கோடிக் கணக்கில் பணம் குவித்துவிட்டான்; அவனை அடைந்தால் கேடு இல்லை என்று கருதலாம். அவன் சமூக விரோதி, பிறர் அடைய வேண்டிய பொருளை ஒருவனே குவிக்கிறான். அவன் மனம் உவந்து பிறர்க்கு எந்த உதவியும் செய்யமாட்டான். வசதி உடையவன் என்பதால் உன் அசதிகளை அகற்றுவான் என்று கருதிவிடாதே.

சான்றோர் உறவு அத்தகையது அன்று; உடனே கேட்ட அந்த அளவே விரும்பியது கிடைக்கும் என்று கூற முடியாது. அது தங்கச் சுரங்கம்; உள்ளே பொதிந்து கிடக்கின்றன. நிரந்தரமாக நன்மை செய்வர். அவர்கள் நன்மைகள் கண்ணுக்குப் புலப்படா; ஆனால் தொடர்ந்து துயர் தீர்ப்பர்; மேன்மக்கள் தொடர்பு நிலைத்தது; தொடர்ந்து உதவுவது, பயன் உடையது; நம்பியவரை அவர்கள் என்றும் கைவிடமாட்டார்கள்.

17. பெரியவர்களை மதிக்கக் கற்றுக்கொள்

(பெரியாரைப் பிழையாமை)

குணம் என்னும் குன்று ஏறி நின்றவர்கள் பெரியவர்கள்; அவர்களை அவமதித்தால் அவர்களை அடக்கிவைக்க முடியாது; "சாது மருண்டால் காடு கொள்ளாது" என்பது பழமொழி; 'சாது' என்பது இந்தச் சான்றோர்களைத் தான் குறிக்கும். "என்ன சொன்னாலும் இவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்" என்று தப்புக் கணக்குப் போடக் கூடாது. அவர்கள் வெறுக்கத்தக்க அளவு அவமதிக்கத் தொடங்கினால் அது திருப்பி அடிக்கும். அவர்கள் சீறிப் பொங்கினால் உன் நிலை மாறிவிடும். ஆறி அடங்குவார்கள் என்று எதிர்பார்க்காதே,