பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. ஏணி

மோகனரங்கம் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் ரகுநாதன். பாலக்கரை ஆஸ்பத்திரியில் இருந்தவாறே கீழ்ப்புறத்து ஜன்னல் வழியாக சூரிய உதயக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தார். இரண்டு வாரங்களாக அவரைப் பொறுத்த மட்டில் பாலக்கரை ஆஸ்பத்திரியின் டி.பி. வார்டுதான் அவருடைய உலகம். அவரைப் பிடிக்கத் தொடங்கியிருந்த அந்தப் பயங்கர வியாதியின் சின்னங்கள் தோற்றத்திலேயே நன்றாகப் புலப்பட்டன. சூம்பிப் போன தென்னங் குரும்பையைப் போன்ற அந்த முகமும் அதிலே ஆழ்ந்து குழி விழுந்த கண்களும் கூரிய நீண்டமூக்கும் காண்பதற்கு விகாரமாகவும், குரூரமாகவும் காட்சியளித்தன. கல்லூரி நிர்வாகிகள் அவருடைய நிலைக்கு இரங்கிச் சம்பளத்தோடு இரண்டு மாத லீவு கொடுத்திருந்தார்கள். அதற்குள் அவர் மேல் அனுதாபம் கொண்டு அந்த நோய் அவரை விட்டுப் போனால் அவர் பிழைத்து வெளியுலகைக் காண முடியும். திருச்சி மோகனரங்கம் கல்லூரிக்கும் ஒர் அருமையான பேராசிரியரை இழக்க வேண்டிய துர்ப்பாக்கியம் நேராது. ஆனால்...? ஆதியையும் சரி அந்தத்தையும் சரி, நிர்ணயிக்க வேண்டியது எவனுடைய பொறுப்போ, அந்த ‘அவன்’ கண்களல்லவா திறக்க வேண்டும்? பிராணாரம்பம், பிராணந்திகம், பிராணாவஸ்தை, இவைகளை எழுதாத எழுத்துக்களாலே எழுதி வைத்து, அதன் வழி இயக்குபவன் அவன்தானே?

“ஸார் ஜன்னலை மூடி விடுங்கள். அந்த வெய்யில் மேலே படக் கூடாது. அது இழைப்பையும் இருமலையும் கிளப்பி விட்டுவிடும்” கூறிக் கொண்டே அந்த வார்டின் டாக்டர் உள்ளே நுழைந்தார்.

டாக்டர் பரிசோதனை முடிந்தது. “என்ன டாக்டர் ஸார், ஏதாவது நம்புவதற்கு இடமிருக்கிறதா?” வேதனையோடு இழைந்த சிரிப்பு ஒன்றை இதழ்கள் நடிக்க, இவ்வாறு கேட்டார் ரகுநாதன்.

“புரொபஸர் ஸார், உங்கள் விஷயத்தில் என் முயற்சியை எந்த அளவு வெற்றிக்கேற்பப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவையும் செய்கிறேன். ஒன்று மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். மனத்தளர்ச்சியும் வீண் அவநம்பிக்கையும்தான் முக்கால்வாசி நோய்! நீங்கள் பேராசிரியர். நான் உங்களுக்கு அதிகம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நம்பிக்கையின் அளவு உங்களிடம் எவ்வளவிற்கு அழுத்தமாக இருக்கிறதோ, அதைப் பொறுத்தே இருக்கிறது என் சிகிச்சையின் வெற்றியும்.”

“என்னவோ டாக்டர், எங்கள் காலேஜ் பையன்களின் அதிர்ஷ்டம் என்னைப் பொறுத்தே இருக்கிறது.”

“ஸார் சொல்ல மறந்துவிட்டனே. மோகனரங்கம் காலேஜ் மாணவர்கள் இருபது இருபத்தைந்து பேர்கள் இருக்கும்.நேற்று இங்கே உங்களைப் பார்க்க வந்திருந்தார்கள்.