பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இந்தப் புத்தகம்

பண்டிதர்; பள்ளி ஆசிரியர்; தமிழ்ச்சங்கப் பணி; பத்திரிகை துணை ஆசிரியர்; இதழாசிரியர்; கவிஞர்; பேச்சாளர்; எழுத்தாளர். சுமார் முப்பதாண்டுகளில் தமிழ் இலக்கிய உலகில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்துவிட்டு மின்னலென மறைந்தவர்.

தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் வாசகர்களிடம் உயர்ந்து நின்றவர். செருக்கு மிகுந்தவர். ஆம்! ஞானச்செருக்கு மிகுந்தவர். தன்னம்பிக்கை, சுயகௌரவம் மிகுந்தவர். தன் படைப்பால் வாசகரிடமும் இந்தக் குணங்களை விதைக்க முயன்றவர்.

பலருக்கு முன்மாதிரியாக Role Model ஆகத் திகழ்ந்தவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் எல்லாம் படைத்தவர்.

தனக்கென தனிநடை, தனிப் பாதை கண்டவர்; தன் நடையைத் தானே விமர்சித்தும் பார்த்தவர்.

கருத்துக்களை நயம்பட உரைத்தவர். சற்று விளக்கமாகவே எழுதியவர்.

வடிவத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தராதவர். உள்ளடக்கத்திற்கு உரம் கண்டவர்.

பலவித அரசியல் சித்தாந்தங்களையும் அணுக்கமாய் உணர்ந்தவர். அடித்தளத்தில் தேசியமும் மக்கள் நலனும் ஓடு பாதையாகக் கொண்டு தன் இலக்கியப் பயணத்தை மேற்கொண்டவர்.

1946ல் ‘இளம்பூரணன்’ என்கிற புனை பெயரில் ஆரம்பித்து, வளவன், மணிவண்ணன், பொன்முடி, கூடலழகன் என்றெல்லாம் பெயர் சூடி 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்தவர். அவர் நா.பார்த்தசாரதி எனும் நா.பா.

குமரிமலர், கல்கி, விகடன், கலைமகள், அமுதசுரபி, தினமணிக்கதிர், தாமரை, சுதேசமித்ரன், உமா, கலாவல்லி, காதல், தமிழ்ப்பொழில், தீபம், இதயம் பேசுகிறது, குங்குமம், கலாவல்லி போன்ற பற்பல இதழ்களில் சிறுகதைகள் எழுதினார் நா.பா.

ஒவ்வொரு கதையும் ஒரு சேதி சொல்லும். ஆசிரியர் உணர்ந்த அதே அனுபவத்தை அதே படிநிலையில் வாசகரும் உணரும் வண்ணம் சிறுகதைகளைச் செம்மையாகப் படைத்தவர் நா.பா.