பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / அலைபட்ட கடலுக்கு மேலே ★ 57



“ஆகட்டும் சார்! பார்க்கிறேன்.”

“அவசியம் பார் மாலா! மறந்துவிடாதே.”

“கட்டாயம் பார்க்கிறேன் சார் வீட்டுக்குப் போனவுடன் பார்க்கிறேன்.” என் நெஞ்சு ‘படக் படக்’ கென்று அடித்துக்கொண்டது.அது ஏனோ? நீ சிரித்த முகத்தோடு விடைபெற்றுக் கொண்டு போனாய்! உன் மாமா பார்த்துவிட்டால்?.. அல்லது உன் மாமாவின் பெண்கள் யாராவது பார்த்துவிட்டால்...? ஐயையோ! நான் ஏன் அப்படிச் செய்தேன்? என் மனம் பதைபதைத்தது. அதன்பின் அன்று இரவு முழுவதும் எனக்கு உறக்கமே இல்லை. என்னென்னவோ பயங்கரமான கற்பனைகள்! என்னென்னவோ பதைப்புகள்! என்னென்னவோ நடுக்கங்கள்!

மறுநாள் மாலை. அன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாக நீ வருகின்ற நேரமும் கடந்து அதற்கு மேலும் ஆகிவிட்டது. நீ வரவில்லை. என் மனத்தில் மெல்ல நடுக்கம் தலைகாட்டியது. அசட்டுத்தனமாக நான் எழுதிய கடிதத்தின் விளைவு என்ன ஆயிற்றோ? உன் வீட்டில் என்ன கலவரத்தை உண்டாக்கிவிட்டதோ? உன் மாமாவும் மாமியும் மற்றவர்களும் என்னென்ன பழிகளைச் சொல்லி உன் முகத்தில் இடிக்கிறார்களோ? நேரம் ஆக ஆக நான் பொறுக்க முடியாத வேதனைக்கு ஆளானேன்.

மாலை ஆறரை மணிக்கு மேலும் ஆகிவிட்டது. நான் சற்றும் எதிர்பாராதவிதமாக உன் மாமாவும் என் நண்பரும் பரபரப்பாக உள்ளே நுழைந்தார்கள். உண்மையாகவே சொல்கிறேன். அப்போது அவர்கள் வரவு என் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. உடம்பில் உதறலெடுத்துவிட்டது.

நல்லவேளை! அப்படி ஒன்றும் மானக்கேடாக நடந்துவிடவில்லை. என் நண்பர் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.

"சார் இன்றைக்கு வெள்ளிக்கிழமை. நல்ல நாளாக இருக்கிறது. உங்கள் ஜாதகம் இவருக்கு வேண்டுமாம். கொடுக்கிறீர்களா?”

எனக்கு என் காதுகளையே நம்ப முடியவில்லை.தூக்கிவாரிப் போட்டது. கனவா? நனவா? எதுவென்றே புரியவில்லை.

"ஜாதகமா?. எதற்கு?.”

என் நண்பர் கண் இமைகளை மூடித் திறந்து குறும்புத்தனமாகச் சிரித்தார்.

"என்ன சார்? ஒன்றும் தெரியாதவரைப் போலக் கேட்கிறீர்களே”

“இல்லை! இல்லை! என்னை விட்டுவிடுங்கள். நான் ஏதோ அசட்டுத்தனமாக அப்படி எழுதியிட்டேன். மாலாவின் அழகுக்கு நான் சற்றும் பொருத்தமே இல்லை. நான் முடவன்!'-நான் வாய்விட்டு அழாத குறையாக அலறினேன். கதறினேன்.ஆனால் உன் மாமாவோ என் நண்பரோ அந்த அலறலையும், கதறலையும் இலட்சியமே செய்யவில்லை.