பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி/அலைபட்ட கடலுக்கு மேலே ★ 59



இருள்

உன் வயிற்றில் ஆலிலை போன்ற அந்த மணி உதரத்தில் நம்முடைய அன்பின் உரு எட்டு மாத வளர்ச்சியை எட்டியிருந்தது.இன்னும் சில மாதங்கள் கழிந்தால் உனக்கும், எனக்கும் முறையே நீயும் நானுமே பரஸ்பரம் குழந்தையாக இருந்த நிலை மாறி, மூன்றாவது உயிர் ஒன்று குழந்தையாகப் பிறந்துவிடும்.

அன்பு, காதல், பிரேமை - எத்தனை ஆயிரம் நளினமான சொற்களால் வாழ்க்கையை வர்ணித்தால் என்ன? இரண்டு உயிர்கள் சேர்ந்து மூன்றாவது உயிரை சிருஷ்டிப்பதுதான் வாழ்க்கை! சிருஷ்டியும் மனித ஜாதிக்கு ஏற்படுகின்ற பயங்கரமான நோய்களில் ஒன்றுதானா? சிருஷ்டியில் உயிர்கள் தோன்றுவதைப் போலவே உயிர்கள் தவறவும் செய்கின்றனவே?

அது உனக்கு நிறை மாதம், அடிக்கடி வந்து உன்னைப் பரிசோதித்துக் கொண்டிருந்த லேடி டாக்டர் இரண்டு வாரம், பத்து நாள், ஐந்தே நாட்கள் என்று தவணை போட்டுக் கொண்டிருந்தாள். அன்று வேலூரில் ஒரு கல்யாணம். கச்சேரிக்கு அழைத்திருந்தார்கள். நிலைமையைச் சொல்லி மறுத்தேன். மிகவும் வேண்டியவர்கள். கட்டாயப்படுத்தினார்கள்.தாட்சணியம் இருந்து தொலைக்கிறதே! என்ன செய்யலாம்? கச்சேரிக்குப் போனேன்.

இரவு ஒன்பதரை மணி, கலியான வீட்டுப் பந்தலே காணாமல் கூட்டம் கூடியிருந்தது. கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பாடத் தொடங்கினால் நான் என்னை மறந்துவிடுவது வழக்கம்.

மெல்ல ஒருவர் மேடையேறி வந்தார். காதருகே பதறிய குரலில் முணுமுணுத்தார். "சார், உங்களுக்கு ஒரு தந்தி! இதோ. எதற்கும் பிரித்துப் பார்த்துவிடுங்கள்.”

நான் தந்தியைப் பிரித்தேன். “மாலாவுக்கு அபாயம். உடனே புறப்படுக” இதயம் பதறியது. கச்சேரி அரைகுறையில் அலங்கோலமாக முடிந்தது.

மணிக்கு முப்பது மைல் வேகத்தில் காரை ஒட்டச் சொன்னேன். உள்ளம்? அது நான் சொல்லாமலே அவ்வளவு வேகத்தில் ஓடியது. சென்னையை அடையும்போது மணி ஒன்றாகிவிட்டது.

அடையாறு பிரசவ ஆஸ்பத்திரி. நான் உள்ளே வந்தேன். ஒரு நர்ஸ் எதிர்ப்பட்டாள்.

“நீங்கள் யார்?”

நான் விவரங்களைக் கூறினேன்.

"அந்த அம்மாள் காலமாயிட்டாங்களே. பதினொன்றரை மணிக்கே அவங்க மாமா வந்து பிரேதத்தை வாங்கிக்கிட்டுப் போயிட்டாங்களே.”

"குழந்தை.”