பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. மூட நம்பிக்கை

“ஒரு மாதமாய்ப் படித்துப் படித்துச் சொல்கிறேன். நீங்கள் காதில் போட்டுக் கொண்டால்தானே?”

“எதைச் சொல்கிறாய் ராஜம்?”

“எல்லாம் தெரிந்து கொண்டே ஒன்றும் தெரியாதது போலப் பாவனை பண்ணுவதுதான் உங்கள் வழக்கமாயிற்றே! நீங்கள் கதாசிரியர் இல்லையா?”

“இந்தா அநாவசியமாக வந்ததும் வராததுமாக என்னை வம்புக்கு இழுக்காதே. சுற்றி வளைத்துக் குத்திக் காட்டாமல் விஷயத்தைச் சொல். கேட்கிறேன்.”

“இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து நோயும் நொடியுமாகப் பிடுங்கித் தின்னுகிறது. இது நமக்கு ஆகவில்லை. மருந்துக்கும் டாக்டருக்குமாகக் கொட்டிக் கொடுத்துக் கடன் ஏறினதுதான் கண்டது. தப்பினோம் பிழைத்தோம் என்று பேசாமல் வேறு வீடு பாருங்கள்.”

“இதெல்லாம் சுத்த அசட்டுத்தனம். எனக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கை இல்லை. நோய், நொடிகள் இந்த வீட்டை மட்டுமா குத்தகைக்கு எடுத்திருக்கின்றன? உலகம் பூராவும் நோயும் மருந்தும் வைத்தியனும் இருக்கத்தான் செய்கிறார்கள்.”

“நான் சொல்லுகிறேனே என்று நீங்கள் நம்ப வேண்டாம்! நீங்களாகவே சுயமாக யோசித்துப் பாருங்களேன். இங்கு வந்து ஆறு மாதமாகவில்லை.. அதற்குள் எவ்வளவு பேர் படுத்துக்கொண்டோம்? வந்ததும், வராததுமாக எனக்கு டைபாய்டு. இருபது நாள் மருந்தும் ஊசியுமாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தேன், வைத்தியச் செலவு இருநூறு ரூபாய்க்கு மேல் ஆகி விட்டது. நான் பிழைத்து எழுந்திருந்தேனோ, இல்லையோ மறு வாரம் உங்களுக்கு நிமோனியா. நீங்கள் படுத்துக் கொண்டு விட்டீர்கள்! ஒரு மாதத்திற்கு மேல் ஆபீஸ்”க்கு லீவு போட்டு விட்டுக் கிடந்தீர்கள். முந்நூறு ரூபாய் வைத்தியச் செலவோடு எலும்பும் தோலுமாகக் கொத்தவரக்காய் வற்றல் மாதிரி பிழைத்து எழுந்திருந்தீர்கள்...”

“சே! சே! இது என்ன? ஒயாத தொந்தரவாகப் போச்சு உன்னோடு! உடம்புக்கு வந்ததெல்லாம் கூட அதிகக் கஷ்டமாகத் தோன்றவில்லை. நீ சொல்கிற காரணந்தான் சகிக்கவில்லை.”

“இன்னும் கேளுங்கள்! என்னோடும் உங்களோடும் போயிருந்தால் கூடப் பரவாயில்லையே? மறு மாதமே குழந்தைக்கு ‘வைசூரி' போட்டுப் பிழைத்தது மறுபிழை என்று ஆகி விட்டது. நீங்கள் நம்பினால் நம்புங்கள்; நம்பா விட்டால் போங்கள். நாள் தவறாமல் நோயும் நொடியும் அலைக்கிறதைப் பார்த்தால்