பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. நல்லதோர் வீணை செய்து


காலையில் பிடித்த மழை, கொஞ்சமாவது நிற்க வேண்டுமே? இல்லை. கொட்டித் தீர்த்து விடுவேன் என்பது போல் விடாமல் பெய்து கொண்டிருந்தது. தார் பூசிய சுவர் போல் வானம் மேகங்களால் இருண்டு கிடந்தது. மலைக்குளிர் வேறு சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்?

“ஏன் இங்கு வந்து மாட்டிக் கொண்டோம்?” என்று ஆகி விட்டது எனக்கு. தேயிலை எஸ்டேட்டின் நடுவில் இடிந்த அந்தச் சின்னஞ்சிறிய தகரக் கொட்டகை இருந்தது.அதில் ஒழுகிய இடம் போக மிஞ்சிய ஒரே ஒரு மூலையில் நானும் டிரைவரும் ஒண்டிக் கொண்டு நின்றோம்.

உடுமலைப் பேட்டையிலிருந்து தீர்த்தங்கரர் பாறையையும், திருமூர்த்தி மலையையும் பார்த்துப் போகலாமென்று ஜீப்பில் புறப்பட்டிருந்தோம். நானும் டிரைவருமாக இரண்டே இரண்டு பேர்தான். திருமூர்த்தி மலையைப் பார்த்து முடிந்ததும், மலையில் தேயிலைத் தோட்டங்கள் இருக்கும் பகுதிகளை சென்று பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை உண்டாயிற்று. என் விருப்பத்தை டிரைவரிடம் கூறினேன்.

“மூணாறு போகிற ரோட்டிலே அதிக தூரம் போனால்தான் எஸ்டேட்டுகளைப் பார்க்க முடியும்! இப்பொழுதே மழை தூறுகிறது. பெரிசாகப் பிடித்து விட்டால் அங்கே போய்த் திரும்புவது கஷ்டமாச்சே?” என்று பதில் சொன்னான் அவன்.

“பரவாயில்லை அப்பா! போய்விட்டுத்தான் வருவோமே. இதற்கென்று தனியாக இன்னொரு நாளா புறப்பட்டு வரப் போகிறோம்? மழை இலேசாகத்தான் தூறுகிறது” என்றேன் பிடிவாதமாக.

“சரி, நீங்கள் ரொம்பச் சொல்றீங்க. எப்படி மாட்டேன்கிறது?” என்று அரைகுறை மனத்தோடு புறப்பட்டான் அவன்.

அந்த டிரைவருக்கு ஜோசியம் தெரியுமோ என்னவோ? இப்போது அவன் சொன்னது உண்மையாகி விட்டது. எங்கள் ஜீப் எஸ்டேட்டுகள் இருக்கும் மலைப் பகுதியை அடைந்த போதே மழை பலமாகப் பிடித்துக் கொண்டு விட்டது. அப்போது காலை பதினொரு மணிக்கு மேல் இருக்கும். ஜீப்பை நிறுத்தி விட்டு அந்தத் தகரக் கொட்டகையில் ஒண்டினோம். மழை நிற்கவே இல்லை. மாலை ஆறே கால் மணி ஆகி விட்டது. என் மணிக்கட்டில் கடிகாரமும், காலடியில் ஒழுகின மழைத் தண்ணிரும் வஞ்சகமின்றி ஒடிக் கொண்டிருந்தன.