பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



துணியால் போர்த்திக் கொண்டு உங்கள் ஜீப்பின் முன்பக்கத்து ஸீட்டில் முடங்கிக் கொள்கிறோம்” என்றாள்.

எனக்கு அவளுடைய பயத்துக்கும் பதற்றத்துக்கும் அர்த்தமே தெரியவில்லை. வியப்புத்தான் வளர்ந்தது. இரக்கமாகவும் இருந்தது.

“சரி! ஏறிக்கொள். நன்றாகப் போர்த்திக் கொள். குழந்தை அழுது காட்டிக் கொடுத்துவிடப் போகிறது. ஜாக்கிரதை” என்று எச்சரித்தேன்.

அவள் அவசரம் அவசரமாக ஜீப்பில் ஏறி முன் போலவே துணியால் போர்த்தி விட்டு முடங்கிக்கொண்டாள். ஜீப்புக்குள் டிரைவர் கொண்டு வந்திருந்த ‘கித்தான்’ ஒன்று இருந்தது. வருகிறவர்கள் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகத் துணிக்கு மேல் அந்தக் கித்தானையும் போட்டு மூடி வைத்தேன். மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதுபோல் குழந்தையும் அழுகையை நிறுத்தி அடங்கிவிட்டது. எப்படித்தான் அதன் அழுகையை அவள் நிறுத்தினாளோ, தெரியவில்லை!

அசுர வேகத்தில் மலை ரஸ்தாவே அதிரும்படி பாய்ந்து வந்தது அந்த லாரி, இருளில் வரும் இரண்டு பெரிய கொள்ளிவாய்ப் பிசாசுகளைப்போல லாரியின் முன் விளக்குகளின் வெளிச்சம் விநாடிக்கு விநாடி நாங்கள் இருந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

லாரிக்குள்ளிருந்து வந்த ஆட்களின் பேச்சுக் குரலிலிருந்து குறைந்தது ஏழெட்டுப் பேர்வழிகளாவது அதில் இருக்கலாம் என்று தோன்றியது.

சொல்லி வைத்தாற்போல எங்கள் ஜீப்புக்கு அருகில் வந்ததும் லொடலொடத்து ஒடும் தன் ‘புலன்களை’ அடக்கிக் கொண்டு டக்கென்று நின்றது அந்த லாரி.டிரைவர் உட்பட ஏழெட்டு முரட்டு ஆட்கள் அதிலிருந்து கீழே குதித்து எங்களை நோக்கித் திடுதிடுமென்று ஒட்டமும் நடையுமாக வந்தனர். வந்தவர்களில் இரண்டுபேர்கள் துப்பாக்கி வைத்திருந்தார்கள். வேட்டையாடுகிறவர்கள் உபயோகிக்கிற பெரிய துப்பாக்கிகள் அவை.

"இந்தப் பக்கமாகக் குழந்தையோடு ஒரு பெண் வந்தாளே! நீங்கள் பார்த்தீர்களா? வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டிருப்பாள்.இருபது இருபத்தெட்டு வயசிருக்கும்.” அந்த லாரி டிரைவர் என்னிடம் கேட்டான்.

“இல்லையே! நாங்கள் சும்மா எஸ்டேட்டுகளைச் சுற்றிப் பார்க்க வந்தோம். எப்போதோ திரும்பிப் போயிருக்க வேண்டியவர்கள். மழை பலமாய்ப் பிடித்துக் கொண்டுவிட்டதனால் ஜீப்பை இப்படி நிறுத்திவிட்டு இந்தத் தகரக் கொட்டகையில் நின்றுகொண்டிருந்தோம்.இப்போதுதான் மழைநின்றதும் வெளியே வந்தோம்”நான் மனத்தைச் சமாளித்துக் கொண்டு பதறாமல் நிதானமாக இப்படி ஒரு பொய்யைச் சொன்னேன்.

அடுத்த கணமே என் பொய் வெளுக்கும்படியாக ஒரு துரதிர்ஷ்டம் நடந்துவிட்டது. கித்தானையும் வெள்ளைத் துணிப் போர்வையையும் மீறிக்