பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

632 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் "அத்தியூற்று சின்னமுத்துப் பண்டாரம் எப்படிப் பட்டவன்னு நீங்கள் தெரிஞ்சுக்கிட்டாப் போதும், பணம் வேண்டாமுங்க” என்றான் சின்னமுத்து. இன்ஸ்பெக்டரோ வற்புறுத்தி நோட்டுக்களை அவன் கையில் திணித்தார். . "அப்படின்னா ஒன்று செய்யுங்க கீழே ஒரு நாலைஞ்சு கரடியையாவது வேலை தீர்த்திருப்பேன். அதனோட தோலை எல்லாம் நீங்க எடுத்துக்கிடுங்க. கிரயம் 50 ரூபாய்க்கு மேல் தேறும்” "நீ செய்திருக்கும் வேலைக்கு ஆயிரமாயிரமாகக் கொடுக்கலாம்” என்றார் இன்ஸ்பெக்டர். - “பண்டாரம் இப்படிப்பட்ட சாமர்த்திய முள்ளவனா இருந்ததனால்தான் என் பலாப்பழக் குத்தகை உருப்படியா லாபம் கொடுக்க முடியுது” தேவர் நன்றி தொனிக்கும் குரலில் கூறினார். “ஒருவேளை இந்த அத்தியூற்று ஏரியாவிலிருந்து என்னை மாற்றினாலும், சின்னமுத்துப் பண்டாரம் அந்த நள்ளிரவில் கரடிகளுக்கு நடுவே துப்பாக்கி இன்றி, வெட்டரிவாளாலும் யுக்தியாலும் போராடி மீண்ட அட்டகாசத்தை என் ஆயுள் பரியந்தம் என்னால் மறக்கவே முடியாது. பரசுராம் ஆச்சரியம் உள்ளடங்கிய குரலில் கதையைக் கூறி முடித்தார். "இங்கே கரடிகள் அவ்வளவு அதிகமா"? நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்! இத்தனை நேரம் கேட்டபின் என்னிடமே கரடி விடுகிறீர்கள் சார்' பரசுராம் என்னைப் பதிலுக்குக் கேட்டார். நாங்கள் அத்தனை பேரும் அந்த ஹாஸ்யத்தை அனுபவிக்கும் பாவனையில் விழுந்து விழுந்து சிரித்தோம். (1963-க்கு முன்)