பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98. இது சத்தியம்

“என்ன செளக்யமா?” என்று கேட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்தாள் கலா. கட்டிலில் என் பக்கதில் அவள் வந்து அமர்ந்த விதமும், நெருக்கமாக இடைவெளி யில்லாமல் அமர்ந்ததும் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். காலம் மிகவும் முன்னேறிவிட்டது. இதற்குப் பெயர்தான் முன்னேற்றமா என்று நான் சிந்தனைச் சூழலில் மூழ்கினேன்.

“என்ன ரொம்பப் பலமான யோசனை? எந்தக் கோட்டையைப் பிடிக்க பதிலே. பேச மாட்டேன் என்கிறீர்கள்?’ என்றாள் கலா.

நான் அவளையே உற்றுப் பார்த்தேன். அவளுக்கு வயது பதினைந்துதான் இருக்கும். உடல் வளர்ச்சி பத்தொன்பது வயதைக் காட்டிற்று. பளிச்சென்று கவனத்தைக் கவரும் தாழம்பூ நிறம். அவள் கண்கள் எல்லாவற்றையும் தொட்டு, கேட்டு, வாங்கி, அனுபவித்துப் பார்த்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தையும் அதன் முடிவை அறியாத அறியாமையையும் ஒருங்கே காட்டின.

மனத்தில் எழுந்த உணர்ச்சிக் கிளுகிளுப்பை அடக்கிக் கொண்டு, “வா, இப்போதுதான் வருகிறாயா? இன்னும் யார் உன்கூட வந்தது கலா?” என்றேன்.

“அம்மா கூடத்தான் வந்தேன். உள்ளே போயிருக்கிறாள். நான் வந்தது கூடத் தெரியாமல் என்ன யோசனையோ?”

“ஒன்றும் இல்லை, ஆபீஸ் விஷயம்” என்று ஒரு பொய்யைச் சொன்னேன். ஆபீஸில் கேட்டால் வீட்டுவிஷயம் என்றும், வீட்டில் கேட்டால் ஆபீஸ் விஷயம் என்றும் என்னுடைய திடீர் திடீர் சமாதிக்குக் காரணம் சொல்லிப் பழக்கமாகிவிட்டது.

“பஸ்ஸில் வந்தது ஒரே அலுப்பு. ஐந்து மணி நேரம் பிரயாணம். ஒரே கூட்டம், நெரிசல்.எப்படா வந்து சேரப் போகிறோம் என்றாயிற்று” என்று கலா தன் கைகளைத் தூக்கி உடலை நெளித்து சோம்பல் முறித்தாள். அப்படியே சாய்ந்தவளாக, மல்லாக்கப் படுத்து விட்டாள். அவள் தாவணி இலேசாக நழுவியிருந்தது.

நான் திடுக்கிட்டுப் போனேன். ‘இது என்ன பெண்ணா? பெண்மையின் பயந்த சுபாவத்தையே காணோமே! சீ.சீ என்னதான் உறவாகட்டுமே; அதற்காக இப்படியா? நானல்லவா பயந்து பழிக்குப் பயந்து, நாலு பேர் கண்களுக்குப் பயந்து ஒதுங்க வேண்டியிருக்கிறது? நான் மாமன் உறவுதான். அவளும் அக்காள் பெண் உறவுதான்’. உள்ளே என் ஒன்றுவிட்ட அக்காவும் மனைவியும் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.