பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102. ஒரு மணிவிழாக் கதை

வெள்ளிவிழா எழுத்தாளர் வேங்கடநாதனை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்திருக்கா விட்டாலும் அது ஒரு பெரிய குற்றமாகி விடாது அதென்ன எழுத்தாளர் வேங்கடநாதன் என்று மட்டும் போடாமல், வெள்ளி விழா எழுத்தாளர் என்று போட்டிருக்கிறீர்களே என்பதாக நீங்கள் கேட்க வரலாம். அதற்குச் சரியான காரணம் இருப்பதனால்தான் அப்படிப் போட்டிருக்கிறது.

வேங்கடநாதன் ஒரே ஒரு துறையில் மட்டும் திறமைசாலி அல்ல. அவர் பல்வேறு துறைகளில் திறமைகள் நிறைந்தவர். 1916ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராக இருந்திருக்கிறார். பின்பு பத்து ஆண்டுகள் ஒரு தினசரியில் செய்தி ஆசிரியர், அதன் பின் இருபது ஆண்டுகளாக ஒர் அயல்நாட்டுத் தூதரகத்தின் செய்திப் பிரிவில் பதவி வகித்தார். இறுதியில் ஒரு பத்து ஆண்டுகள் ஒரு டியூடோரியல் கல்லூரியில் பேராசிரியர். இப்படியாக அவரது வாழ்வு ஆசிரியர் பதவியில் தொடங்கி, ஆசிரியர் பதவியிலேயே வந்து செக்கு மாடு வட்டம் சுற்றினாற் போல நின்று விட்டது. குடும்ப வாழ்க்கையில் அவருக்கு ஒரு குறையுமில்லை. பதவிகளிலிருந்து ஒய்வு பெற்ற பின்பும் வீடு, வாசல், கார், டெலிபோன், பேங்கில் ரொக்கமாக ஓர் ஐம்பதினாயிரம் சேமிப்பு எல்லாம் இருந்தன.

இருந்தும், அவரை இடைவிடாமல் வாட்டியது ஓர் நைப்பாசை. அதுதான் மணிவிழா ஆசை. ஏறக் குறைய எழுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் தம்முடைய மணிவிழாவை ஒருவரும் கொண்ட முன் வரவில்லையே என்பதுதான் அவருடைய பெருங்கவலையாக இருந்தது. தாம் வாழ்ந்த துறைகளில் எந்தத் துறை மணிவிழாவுக்குப் பொருத்தமானது என்று சிந்தித்தார். அயல் நாட்டுத் தூதரக அலுவலைத் தவிர்த்து, பத்திரிகை எழுத்து ஆசிரியர் தொழில்களில் பணியாற்றிய ஆண்டுகளைத் தொகுத்து மொத்தமாக ஒரு சேவைத் தகுதியைக் கற்பித்துக் கொண்டு - அந்தச் சேவைக்குப் பாராட்டு இல்லையே என்று கவலைப்பட்டார். மூன்று லட்ச ரூபாய்க்குச் சொத்துள்ள ‘முத்தமிழ்ச்சரடு’ ஆசிரியர் மூக்கையனார் - தமக்கு மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் கடனிருப்பதாக அறிக்கை விட்டு-மணிவிழா நிதி திரட்டிக் கொண்டதையும், பாவலர் பன்னீர்ச் செல்வம்-பசிக் கொடுமை தாளாமல் பஞ்சப் பாட்டாகப் பாடி நாற்பதாண்டு நிறைவதற்குள்ளேயே மணிவிழாக் கொண்டாடி (கொண்டு+ஆடி) ‘வறுமைக் கவிவாணர்’ என்ற பட்டத்தையும் - முப்பதினாயிரம் ரூபாய்ப் பொற்கிழியையும் பெற்றதையும் கண்டு கண்டு மனம் குமுறியவர் வேங்கடநாதன். இந்த மனக்குமுறல் தான் அவரை ஓரளவு மணிவிழாப் பித்துக் கொள்ளச் செய்திருந்தது.