பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103. சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும்

பையன் பி.காம் பரீட்சையில் தேறி விட்டான் என்றாலும், அவன் ‘டிஸ்டிங்ஷன்’ வாங்கவில்லை என்பது அவருக்குக் கவலையளிக்கத்தான் செய்தது. முதல் வகுப்பு இல்லை, இரண்டாம் வகுப்பும் இல்லை. சாதாரணமாகத் தேறியிருந்தான்.

திவான் பகதூர் திருவேங்கடம் பிள்ளை பேரப் பையன் பரீட்சை தேறியிருக்கும் லட்சணத்தைக் கண்டிப்பதற்காக அவன் அம்மாவை - அதாவது தம்முடைய ஒரே மகள் நாச்சியாரைக் கூப்பிட்டனுப்பினார். நாச்சியார் வந்தாள். எதிர்த்துப் பேசினால், அப்பாவுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால், ப்ளட்ப்ரஷர் அதிகமாகும் என்றெல்லாம் தெரிந்திருந்ததனால் அடக்க ஒடுக்கமாக அப்பாவுக்கு முன் வந்து நின்றாள் மகள். கிழவர் இரைந்தார்; “பார்த்தியா, உன் பிள்ளையாண்டான் பாஸ் பண்ணியிருக்கிற லட்சணத்தை இவனை நம்பி நான் என்ன என்னவோ கோழிக் கனாக் கண்டுக்கிட்டிருக்கேன். ஒரு செகண்ட் கிளாஸ் கூட வாங்கலை. இவனை நம்பி ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸிலே’ இடத்துக்கு எழுதினேனே! இப்ப என்ன செய்யிறது”

“அவன் தலையிலே எழுதியிருக்கிறது அவ்வளவு தான் அப்பா! அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?”

“இந்தப் போர்டிலே பளிச்சுப் பளிச்சுனு எழுதி வச்சிருக்கே, இதெல்லாம் நாளைக்கு யாரை நம்பி விடறது?’ என்று கூறிக் கொண்டே வாக்கிங் ஸ்டிக்கால் முகப்பில் இருந்த அந்தப் பெரிய பித்தளைப் போர்டை மகளுக்குச் சுட்டிக் காட்டினார் திவான் பகதூர். திருவேங்கடம் கெமிக்கல்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரிஸ், திருவேங்கடம் ஃபெர்டிலைஸர்ஸ், மெட்ராஸ் மெஷின் டுல்ஸ் அன்ட் அல்லய்ட் பிராடக்ட்ஸ் என்று கம்பெனிகளின் பெயர்கள் பளீரென்று பாலிஷ் செய்திருந்த பித்தளை எழுத்துக்களில் மின்னின.

“என்னமோ போம்மா, ஒண்ணுமே நல்லாயில்லை.பி ஃபார்ம் தொந்தரவு, ஃபாரின் எக்ஸ்சேஞ்ஜ், எல்லாத்தையும் சமாளிச்சு, எப்பிடியோ தலை கீழே நின்று, பழைய சிநேகிதன் ராபர்ட்ஸனுக்கு லெட்டர் மேலே லெட்டராப் போட்டு நச்சரிச்சு’லண்டன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்லே’ இடம் பிடிச்சேன். உலகத்திலே இருக்கிற கோடீசுவரன்களோட பிள்ளைகள் எல்லாம் படிக்க வருகிற இடம் அது. இப்ப இவனை அங்கே எப்படித் தள்ளி விடறதுன்னே புரியலை”

“அனுப்புங்கப்பா, எல்லாம் அங்கே போய்ப் படிச்சா மாறிடுவான்” என் கூறி விட்டு நாச்சியார் மெல்ல நழுவி விட்டாள்.