104. கிழிசல்
“என்ன ஐயா! ரோடு ரிப்பேர் நடந்து கொண்டிருக்கிறது போலிருக்கிறதே? குறுக்கே பள்ளம் வெட்டியிருக்கான். மோட்டார் சைக்கிள் போகாது.”
“என்ன செய்கிறது?” பின்புறம் காரியரில் உட்கார்ந்து கொண்டிருந்த நண்பர் என்னைக் கேட்டார். சைக்கிள் என்னுடையதானாலும் நான் சைக்கிளோடு அவரைச் சந்திக்கிற போதெல்லாம், இலவசச் சவாரி செய்யும் உரிமை அந்த நண்பருக்கு உண்டு.
“பக்கத்து சந்து வழியாக விட்டுக் கொண்டு போய் விடலாமா?” நான் மெல்லச் சிரித்துக் கொண்டே கேட்டேன்.
“பக்கத்துச் சந்தா? ஐயையோ வேண்டவே வேண்டாம். நான் பேசாமல் இறங்கி நடந்தே போய் விடுகிறேன்.”
“ஏன் அப்படிப் பயந்து சாகிறீர்?”
“ஏனா? உமக்கு ஒன்றுமே தெரியாதா? அல்லது வேண்டுமெனறே என் வாயைக் கிண்டுகிறீரா?”
நான் பதில் சொல்லாமல் முன் போலவே அவரைப் பார்த்துக் குறும்புத்தனமாகச் சிரித்தேன். மேற்படி சந்துக்குள் நுழைந்து செல்ல நண்பர் பயப்பட்டது நியாயந்தான். சாதாரணமாக மாலை ஐந்தரை மணிக்கு மேல் எவ்வளவு திட வைராக்கியமுள்ள ஆண் பிள்ளையானாலும் சரி, அந்தச் சந்தின் ஒரு கோடியில் நுழைந்து மறு கோடி வழியாக வெளியேறி விடுவதென்பது சுலபத்தில் முடிகிற காரியமில்லை. அப்படி நுழைந்து வெளியேறாமலிருப்பதற்காகவே காரிலும், ஜட்காவிலும், கால்நடை யாகவும், தரத்துக்கேற்றபடிப் பல உல்லாஸ் புருஷர்கள் அந்தச் சந்திற்கு 'வாடிக்கையாக’ வந்து போவதுண்டு.
ஆம்! அது ஒரு தனி உலகம்! அந்தக் காலத்தில் தேவதாசிகளென்றும், அதற்குப் பின் கணிகையர்களென்றும் கூறப்பட்டு, இந்தக் காலத்தில் எந்தப் பெயரால் அழைப்பதென்றே தெரியாமலிருக்கும் அழகின் பிம்பங்கள். கேளிக்கைக்காக நாடி வருபவரையும், நாடாது தெருவோடு போகிறவரையும், வலை போட்டு இழுக்க வழி மேல் விழி வைத்து நிற்கும் போக பூமிதான் அந்தச் சந்து.
“என்ன ஐயா, சந்து வழியாக வேண்டாமென்றால் வேறு எப்படித்தான் போவது? - அதையாவது சொல்லுமேன்...?”
“திரும்பி மெயின் ரோடு வழியே போனால் என்ன?”
“அப்படிப் போனால் இரண்டு மைல் அதிகமாகச் சுற்ற வேண்டும்? பெட்ரோல் செலவாகுமே, என்று பார்க்கிறேன்.”