பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106. காக்கை வலிப்பு

வீட்டு வாயிற் படியில் நின்று பார்த்தேன். முன்புறத்தில் தோட்டம் மிக அழகாக இருந்தது. ஒழுங்காகக் கத்திரித்து விடப்பட்ட அழகிய செடிகள். பத்தி, பத்தியாய்ப் பாத்தி, பாத்தியாய்ப் பல நிறப் பூக்கள்; அவ்வளவும் மணமற்றவை. மணமில்லாதவையானால் என்ன? பார்ப்பதற்கு அழகாயிருக்கின்றனவே, அது போதாதா? பார்ப்பதற்கு அழகாயிருந்தால் வேறு எது இல்லா விட்டாலும் மன்னிக்கலாம் தானே?

நாளைக்கு விடிந்தால் என்னுடைய இந்தச் சிறந்த பூந்தோட்டம் பரிசு வாங்கப் போகிறது. யாரிடம் பரிசு வாங்கப் போகிறது? எதற்காகப் பரிசு வாங்கப் போகிறது? என்று கேட்கிறீர்களா? அடப்பாவமே! இது கூடத் தெரியாமலா இந்த ஊரில் இருக்கிறீர்கள்? நகரத்திலுள்ள பங்களாக்களின் தோட்டங்களில் மிகச் சிறந்ததாக எது வளர்க்கப்பட்டிருக்கின்றதோ, அதை அந்த வருடத்தின் சிறந்த பூந்தோட்டமென்று தேர்ந்தெடுத்து மாநகராட்சியினர் பரிசு கொடுக்கிறார்கள். மாநகராட்சியினர் கூட இதெல்லாம் செய்கிறார்களா என்று சந்தேகம் வேண்டாம். நகரத்தின் அழகை அதிகமாக்குபவர்களை உற்சாகப்படுத்த வேண்டாமா? அதற்காகத்தான் இப்படியெல்லாம் பரிசு கொடுக்கிறார்கள். ‘பங்களாக்களும், பூங்காக்களும், விண்ணைத் தொட நிமிர்ந்த நிற்கும் சிமிண்டுச் செழிப்புக்களும்தான் நகரத்திற்கு அழகா?’ என்று இடக்காகக் கேட்காதீர்கள். ஓட்டைக் குடிசைகளிலும், சாக்கடை புகுந்து ஓடும் சேரிகளிலும் பரிசு கொடுக்க என்ன இருக்கிறதாம்? ‘ப்யூட்டி’ வேணும் சார், ப்யூட்டி! இந்த ‘ஸென்ஸ் ஆப் ப்யூட்டி’ (அழகு உணர்ச்சி) இருக்கிறதே, அது தமிழனுக்குச் சுத்தமா இல்லே சார்! பார்ப்பதற்கு அழகாயில்லா விட்டால் வேறு எது இருந்தாலும் மன்னிக்கக்கூடாதுதானே?

நாளைக் காலையில் சரியாக ஏழு மணிக்கு நீதிபதிகள் தோட்டத்தைப் பார்க்க வந்து விடுவார்கள். எல்லாப் பங்களாக்களின் தோட்டங்களையும் பார்த்து, எதற்குப் பரிசு கொடுக்கலாம் என்பதைத் தீர்மானம் செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் கார்ப்பொரேஷன் சில பெரிய மனிதர்களை நீதிபதிகளாக நியமிக்கிறது. அந்த நீதிபதிகள்தான் விடிந்ததும் இங்கேயும் வரப்போகிறார்கள். வரட்டுமே! வந்து பார்த்ததுமே மூக்கில் விரலை வைத்து வியக்கப் போகிறார்கள். சாதாரணமாகவா வைத்திருக்கிறேன் இந்தத் தோட்டத்தை? மூன்று மாதக் காலமாக முயன்று அப்படியே பிருந்தாவனமாக அல்லவா மாற்றியிருக்கிறேன். தோட்டக்காரப் பனையப்பனை ஒரு விநாடி சும்மா நிற்க விட்டிருப்பேனா? பம்பரமாகச் சுழன்றல்லவா அவனை வேலை வாங்கியிருக்கிறேன். அவனை இந்த மாதிரி வேலை வாங்கியிரா விட்டால் அதோ அந்த ரோஜாப் பாத்தியில் அவ்வளவு பூக்கள் அத்தனை விதமான நிறத்தோடு பூத்திருக்க