பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109. அமெரிக்காவிலிருந்து ஒரு பேராசிரியர்

டில்லியில் மத்திய அரசாங்க உதவிக் காரியதரிசியாக உத்தியோகம் பார்க்கும் தன் மைத்துனன் கே.கிருஷ்ணமூர்த்தி என்னும் கே.கே.மூர்த்தியிடமிருந்து அன்று பகல் வேளையில் இரண்டாவது டெலிவரியில் கிடைத்த கடிதத்தை மற்ற எல்லாக் கடிதங்களையும் பிரித்துப் படித்த பின் கடைசியாகத்தான் பிரித்தார் கைலாசநாதன் காரணம்? பரஸ்பரம் க்ஷேம லாப விசாரணையைத் தவிர அதில் வேறு எதுவும் முக்கிய சமாசாரம் இராது என்ற அனுமானம்தான்.

அன்று வந்திருந்த கடிதத்தைப் பொறுத்த வரை அவருடைய அனுமானம் பொய்யாய்ப் போய் விட்டது. மைத்துனன் மூர்த்தி தன் பொறுப்பில் டில்லியிலிருந்து கிராமத்துக்கு அனுப்பி வைக்கப் போகிற ஒரு முக்கியமான விருந்தாளியைப் பற்றி கடிதத்தில் எழுதியிருந்தான். . -

“நான் அமெரிக்கா போயிருந்த போது எனக்கு மிகவும் உதவியாயிருந்தவரும், ஆந்த்ரபாலஜிப் பேராசிரியருமான மிஸ்டர் ஜான்ஸன் தன் மனைவியுடன் இப்போது இந்நாட்டில் மூன்று மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்திருக்கிறார். தென்னிந்திய கிராம வாழ்க்கையை ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதப் போகிறார் அவர். கிராமத்தின் பழமையான வழக்கங்கள், பண்டிகைகள், ஆடல் பாடல்கள், மக்கள் இயல்பு எல்லாம் அவருக்குத் தெரிய வேண்டும். ‘உங்களுக்குத் தெரிந்த கிராமம் ஒன்றை எனக்குச் சொல்லுங்கள்’ என்று என்னைக் கேட்டார் அவர். நீங்கள் வேண்டிய ஒத்தாசையைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் நான், நம் அல்லிப்பட்டி கிராமத்தை அவருக்கு சிபாரிசு செய்திருக்கிறேன். உங்கள் சாதகமான பதிலை உடன் தந்தி மூலம் எனக்குத் தெரிவிக்கவும்” என்று எழுதியிருந்தான் மூர்த்தி. .

தாமதமில்லாமல் உடனே பதில் தந்தியைக் கொடுத்தார் கைலாசநாதன். இதில் அவருக்கு எந்த சிரமமும் இல்லை. அல்லிப்பட்டியின் எளிய சூழ்நிலையில் ஓர் அந்நிய நாட்டு விருந்தாளியை வாரக் கணக்கில் தங்க வைத்துக் கொள்வது எப்படி என்ற யோசனைதான் கொஞ்சம் மலைக்கச் செய்தது. ஆனால் ஒரு வார காலத்திற்குள் முடிந்த ஏற்பாடுகளைச் செய்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அல்லிப்பட்டி மேஜர் பஞ்சாயத்தின் தலைவர் அவர்தான் என்பதாலும், ஊரின் முக்கியப் பிரமுகர் என்பதாலும் அவருக்கு நிறையச் செல்வாக்கு உண்டு அங்கே.

அந்நிய நாட்டிலிருந்து ஒரு வெள்ளைக்காரர் மனைவியோடு வந்து தங்குவதற்கு ஏற்ற முறையில், தம் வீட்டு மாடி அறையைத் துப்புரவு செய்து, அந்த அறையோடு இணைந்தாற் போல் குளிக்கக் கொள்ள வசதி செய்தார் அவர், கிராமத்தில் முக்கியமானவர்களிடமும் அந்த விஷயத்தைப் பறை சாற்றி விட்டார்.