பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110. குரோட்டன்ஸ்

காரை ஷெட்டில் விட்டுவிட்டுச் சொல்லிக் கொண்டு போக வந்த போது டிரைவரின் கையில் ஒரு கட்டுக் கரும்பும், மஞ்சள் கொத்தும், பெரிதாக ஒரு சீப் வாழைப் பழமும் இருந்தன. -

“நாளைக்குப் பண்டிகைங்க.”

“அதாவது நீ வர மாட்டாய் இல்லையா?”

அவன் சிரித்தான். உடனே போய் விடாமல் தயங்கினாற் போல நின்றான். டம்பப் பையை எடுத்துத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை அவனிடம் நீட்டினாள் அவள். அவன் போவதற்கு முன், “உனக்கு எத்தினி குழந்தைங்க?” என்று இது வரை அவனைக் கேட்டிராத கேள்வி ஒன்றைக் கேட்டாள்.அவன் முதலில் கொஞ்சம் நாணினாற் போல் தெரிந்தது. அப்புறம் வேறெங்கோ பார்த்தபடி பதில் சொன்னான்: “ரெண்டு பசங்க” மேலும் ஏதாவது கேட்கக் கூடுமோ என்ற தயக்கத்தில் சிறிது நின்று விட்டு, அப்படி ஒன்றுமில்லை என்பது உறுதியானதும் புறப்பட்டான் அவன்.

வெளியே தோட்டத்தில் கூர்க்கா நடந்து செல்கிற ‘சரக் சரக்’ ஒலி மாடி வரை கேட்டது. இந்த வீட்டுக்குக் குடி வந்த நாளிலிருந்து இவ்வளவு சலிப்பூட்டும் தனிமையை அவள் உணர்ந்ததே இல்லை. டெலிபோன் ஏதாவது வந்தால் கூட வெளியே கூர்க்கா ஓடி வந்து எடுக்கா விட்டால் அவளேதான் எடுத்துப் பேச வேண்டும். இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை. இரசிகர்களின் தொந்தரவுக்குப் பயந்து அவள் போனை எடுப்பதே கிடையாது. யாராவது எடுப்பார்கள். அவளே பேசித் தீர வேண்டிய அவசியம் இருந்தாலொழிய அவளிடம் கொடுக்க மாட்டார்கள்,

முந்திய நாளே சமையற்காரி ஊருக்குப் போக வேண்டும் என்று போய் விட்டாள். வருவதற்குப் பத்து நாள் ஆகலாம். காரியதரிசியாக, பி.ஏ. படித்த பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்குப் போன வாரம் குருவாயூரில் கல்யாணம். மறுபடி அவள் வேலைக்கு வருவாளா என்பது சந்தேகந்தான். இந்தக் கல்யாணத்துக்கு நேரில் போய் வர எண்ணியிருந்தும், கடைசியில் ஏதோ ஒரு வகைக் கூச்சமும், தயக்கமும் தடுத்ததனால் அவள் போகாமல் விட்டு விட்டாள். அந்தப் பெண் கணவனோடு, மீண்டும் தன்னைப் பார்த்து விட்டுப் போக இங்கே வந்தால், தானே வேண்டியவர்களை எல்லாம் அழைத்து ஒரு வரவேற்புக்கும், விருந்துக்கும் ஏற்பாடு செய்யலாம் என்று உள்ளூற ஓர் ஆவல் உண்டு. ஆனால் அவள் வர வேண்டுமே. கல்யாணத்துக்கு தான் நேரில் வரவில்லை என்ற கோபத்தினால் அவளும் வராமல் இருந்து விடுவாளோ என்றும் தோன்றியது.