பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118. ஒரு கவியின் விலை

முதலில் விமான நிலையத்துக்குக் கார் அனுப்பினால் போதும் என்றுதான் அவள் நினைத்தாள். போட்டி அதிகமாக இருக்கும் போல் தோன்றவே தானே நேரில் போகா விட்டால் சரிப்பட்டு வராதென்று தோன்றியது. வேறு யாராவது நேரில் போய் அவரும் அவர்களோடு தங்கிக் கொள்ளலாம் என்று புறப்பட்டுப் போய் விட்டால் அவளுடைய மதிப்பு என்ன ஆவது? அவள் தோழிகளிடம் சொன்னதெல்லாம் வீணாகி விடுமே?

கிளப்பிலும், தோழிகளிடமும், தெரிந்தவர்களிடமும்,”ஹி வில் ஸ்டே வித் அஸ்” என்று தினம் வாய் அலுக்காமல் சொல்லித் தீர்த்தாயிற்று. மற்றவர்கள் எல்லோரும், “ஐ யாம் ஹிஸ் ஃபேன்” என்று பணிவாகச் சொல்லிய போது அவள் அதே வாக்கியத்தைத் திமிராகச் சொல்லியதன் மூலம் ‘ஹி இஸ் மை ஃபேன்’ என்பது போல் பொருள்படப் பேசிக் கொண்டிருந்தாள். அவரோடு இணைத்துக் கொள்வதில் அவ்வளவு பெருமை அவளுக்கு.

“‘இன்றைய கவிதைகளின் நிலைமை’ என்ற பொருளில் நுண்கலைக் கழகத்தில் ஒரு சிறப்புப் சொற்பொழிவாற்றத்தான் அவர் இங்கே வருகிறார். நுண்கலைக் கழகச் செயலாளர் என்ற முறையில் எங்கள் வீட்டில்தான் தங்க ஏற்பாடாகியிருக்கிறதாம். இவரே சொன்னார்” என்றாள் நுண்கலைக்கழகக் காரியதரிசியின் மனைவி.

“அதெல்லாம் இல்லை. ஒட்டல் பிரம்மப் பிரகாஷில் ஒரு ஏஸி சூட் ரிசர்வ் செய்யச் சொல்லித் தந்தி வந்திருக்கிறதாம்” என்றாள் நீதிபதி சுகவனத்தின் மனைவி.

கவி குமுதசந்திரன் தன்னுடைய பள்ளித் தோழன்-சிறுவயதிலிருந்தே அவனுடைய பல கவிதைகள் தன்னுடைய தூண்டுதலில்தான் தோன்றின; அவன் தன்னோடுதான் தங்குவான் என்று எல்லோரிடமும் சொல்லி வந்த அவளுக்கு இந்தப் பேச்சுக்களெல்லாம் எரிச்சலூட்டின. விமான நிலையத்திற்கு நேரிலேயே போய் அவனை மயக்கி வளைப்பதென்று முடிவு செய்தாள் அவள். அவளால் அதைச் செய்யவும் முடியும். இளம் வயதிலேயே அந்தக் கவி தன்னைக் காதலித்தான் என்று கூட அவள் சில அந்தரங்கமான தோழிகளிடம் சொல்லிச் செருக்குக் காட்டியிருக்கிறாள். அவன் தன் வீட்டில் இன்று வந்து தங்கும்படி செய்யா விட்டால் அவ்வளவும் பொய்யாகி விடும் இப்போது, அவைகளை மெய்யாக்க வேண்டும் அவள்.

உயர்தர இராணுவ அதிகாரியாகியதன் கணவனைப் பற்றி அவளுக்குக் கவலையே இல்லை. அவர் தனக்கு முழு சுதந்திரம் எடுத்துக் கொண்டது போல் அவளுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். குழந்தையும் இல்லாததால் கட்டுக் குலையாத மேனியோடு பத்து வயது குறைவாகவே மதிப்பிடும்படி இருந்தாள் அவள். ஒரு