123. ஒரு கதாபாத்திரம்
மளிகைக் கடை விநாயகம் பிள்ளையைத் தெரியாதவர்கள் எங்களூரில் அநேகமாக இல்லை. அதாவது இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. அவரை ஒரு சாதாரண மனிதர் என்று சொல்வதை விட அவரே ஒரு தத்துவம் என்று சொல்வதுதான் ஏற்கும். சென்ற பன்னிரண்டு ஆண்டுகளாக அல்லது அப்பட்டமான வியாபார மொழியில் சொல்வதாயிருந்தால் ஒரு டசன் வருடங்களாக வியாபாரம் என்கிற தத்துவத்துக்கு ஒரு நிலையான அத்தாட்சியாக வீற்றிருப்பவர் போல் அந்தக் கல்லாப் பெட்டியை இழுத்து மூடித் திறந்து கொண்டிருக்கிறார் அவர்.
“என்ன அண்ணாச்சி? சீனாக்காரன் இப்படி இமயமலை எல்லையிலே வந்து கழுத்தை நெரிச்சிக்கிடிருக்குதானே?” என்று கடைக்கு வருகிற வாடிக்கைக்காரர் யாராவது பேச்சை ஆரம்பித்து வைப்பார்.
“ஆமாம் வேய்! சவத்துப் பய இப்பிடிச் செய்வான்னு தெரிஞ்சிருந்தாக் கர்ப்பூரம் நிறைய வாங்கி ஸ்டாக் முடக்கியிருக்கலாம். பார்த்துக் கிட்டே இரியும். இன்னும் கொஞ்ச நாளானப் பெறவு கர்ப்பூரம் கிடைக்காமல் நம்மூர்ச் செங்கழு நீர்ப் பிள்ளையாரிலிருந்து தீர்த்தபுரிசுவரப் பெருமான் வரை எல்லாச் சாமிகளும் இருட்டிலே திக்குமுக்காடப் போறாக.” என்று சீன ஆக்கிரமிப்பைக் கூடத் தம்முடைய மளிகைக் கடைக் கல்லாப் பெட்டியிலிருந்து எந்தக் கோணத்தில் பார்க்க முடியுமோ, அந்தக் கோணத்தில் பார்த்து அபிப்பிராயம் சொல்வார் விநாயகம் பிள்ளை. விநாயகம் பிள்ளை மிகவும் அழுத்தமான பேர்வழி, ஒரு பிரச்னை யார் யாரைப் பாதிக்கிறதோ, அப்படிப் பாதிக்கிற அத்தனை பேருடைய கோணங்களிலிருந்தும் பார்த்து அந்தப் பிரச்னையைப் பற்றிக் கவலைப்பட அவருக்குத் தெரியாது. கவலைப்படுவதைக் கூடச் சிக்கனமாகவும், அவசியத்தைத் தவிர்க்க முடியாமலும் செய்கிறவர் அவர்.
“அட நீரொருத்தர்… வேலையற்றுப் போய்க் கண்ட கண்ட விஷயத்துக்கெல்லாம் கவலைப்படலாமா? நாற்பது ரூபாய் வருமானமுள்ள காரியத்துக்கு இருபது ரூபாய்ப் பெறுமானத்துக்கு மேலே கவலைப்படப்பிடாது. உங்க கவலை இருக்கே; அதுக்குக் கூட ஒரு பொருளாதார மதிப்பீடு இருக்கணும் வேய்...! நாம் கவலைப்படற பிரச்சினையாலே நமக்கு நஷ்டமிருந்தாலொழியக் கவலைப்படறதை விட்டுடணும்... என்ன? புரியுதா நான் சொல்லற ‘பாயிண்ட்’…? கடுகு மிளகு விற்காத நேரத்தில் மளிகைக் கடையிலிருந்து சாமர்த்தியத்தை விற்று விளம்பரம் செய்து கொண்டிருப்பார் விநாயகம் பிள்ளை. உயர்திருவாளர் விநாயகம்பிள்ளை அவர்களிடம் பொடி போடுவதைத் தவிர வேறு எந்த விதமான கெட்டப் பழக்கமும் (பொடி போடுவது ஒரு கெட்ட பழக்கமாக இருக்குமானால்) கிடையாது. அந்தத்