பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு கதாபாத்திரம்

907

வராமல் இருந்துக்கிட்டிருக்கோமே. அதுவே பெரிய தருமமாச்சே…” என்று சாதுரியமாக எதிராளியை மடக்கிப் பேசுவார் விநாயகம் பிள்ளை. இப்படிச்சொல்லிவிட்டு இரண்டு கைகளையும் மேலே முழ உயரத்துக்குத் தூக்கி ஒரு தாராளக் கும்பிடு போட்டு விட்டு ‘நீங்கள் போகலாமே’ என்ற அர்த்தத்தில் ஒரு சிரிப்பும் சிரித்துவிட்டால், அதற்கு அப்புறம் விநாயகம் பிள்ளைக்கு முன்னால் நிதி வசூல் நோட்டோடு வருகிற எந்தப் பயலும் தயங்கி நிற்க முடியாது. அந்தச் சிரிப்புத்தான் முற்றுப் புள்ளி. அதற்கு அப்புறமும் நெளிந்து குழைந்து முன்னால் நின்று கொண்டிருக்கிற ஆட்கள் அவர் முகத்தில் சிரிப்பைக் காண முடியாது. ஒரு நாளைக்கு ஒரு தரம் சூரியன் உதிக்கிற மாதிரித்தான் அந்தச் சிரிப்பும். அதற்கு ‘ஒன்ஸ் மோர்’ (இரண்டாந் தடவை) கிடையவே கிடையாது.

நமது திரு. விநாயகம்பிள்ளையின் கடையில் ஒரே ஒரு தர்மம் மட்டுமே கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகக் கோவில் கர்ப்பக்கிருகத்தின் நந்தா விளக்கைப் போல அணையாமல் நடந்து கொண்டு வருகிறது. அதைப் பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு :

அவருடைய கடையில் பீடி, சிகரெட், சுருட்டு வகையறாக்களை விற்பதில்லை என்றாலும், எதிர்ப்பக்கம் ஒரு சிறிய பெட்டிக்கடை இருந்தது. அந்தப் பெட்டிக் கடையில் பீடி, சிகரெட், சுருட்டு இத்யாதிகளை வாங்கிக் கொண்டு மளிகைக் கடைப் பக்கம் வருகிறவர்களுக்கு இனாம் சர்வீஸாக இருபுறமும் ஒட்டை செய்யப்பட்ட தகர டப்பா ஒன்றில் தேங்காய் நார்க்கயிறு நீளமாக நுனியில் நெருப்போடு புகைந்து கொண்டிருக்கும். பெட்டிக் கடையும் சுற்றுப்புறமும், ஒலைக்கீற்றுக்களால் வேயப்பட்டிருந்ததனால் தற்காப்பை உத்தேசித்து இந்த ‘ஃபயர் செர்வீஸை’ - விநாயகம்பிள்ளை வசத்தில் ஒப்படைத்திருந்தான் பெட்டிக்கடைக்காரன்.

“ஐயா! நெருப்பு இருக்குதுங்களா?” என்று கேட்டுக் கொண்டு வருகிற ஆட்களை, “அன்னா. அங்ஙான இருக்குது. எடுத்துப் பத்த வச்சிக்க...” என்று சொல்லிப் பெட்டிக் கடையிலிருந்து வருகிற ஆட்களுக்கெல்லாம் நெருப்பு வைத்து அனுப்பிக் கொண்டிருந்தார் விநாயகம்பிள்ளை.

அவர் ரொம்ப அசுவாரஸ்யமாகவும், வெறுப்பாகவும் இருக்கிற வேளைகளில் இந்தப் பதில் கொஞ்சம் மாறி வெளிப்படுவதும் உண்டு.

“இங்கேதான் எங்கெயாச்சும் இருக்கும். வேணமட்டும் அள்ளி வச்சிக்க”

“நான் என்ன எந்தலை மேலேயாஅள்ளி வச்சிக்கிட்டிருக்கேன். அங்ஙனே பாரு. தகர டப்பாவிலே கயிறு இருக்கும்.”

என்று விதவிதமாக ஆளுக்குத் தகுந்தாற் போல் விநாயகம்பிள்ளையிடமிருந்து பதில் வரும். சில சமயங்களில் பதிலே வராது. கை மட்டும் நெருப்புப் புகைந்து கொண்டிருக்கிற இடத்தைச் சைகை காட்டி வைக்கும். மளிகைக் கடைப் பையன்களிடம் அவர் நடந்து கொள்கிற விதமே ஒரு கம்பீரமான தன்மை வாய்ந்ததாயிருக்கும்.