பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு கதாபாத்திரம்

909

இந்த இரண்டு சம்பவங்களும் சாதாரணமானவை. எல்லோருடைய வாழ்விலும் நிகழ்பவை என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால், எல்லோருடைய வாழ்விலும் நிகழும் போது வேண்டுமானால் இவை சாதாரணமானவையாயிருக்கலாம். விநாயகம்பிள்ளையின் வாழ்வில் இவை சாதாரணமாய் நேர்ந்ததாக அவர் ஒரு போதும் ஒப்புக் கொள்ளவே மாட்டார்.

“கேளுங்க... எதுக்குச் சொல்ல வந்தேன்னா... மைசூரிலே நான் தசராவுக்குப் போயிருந்தபோது...” என்று ஆரம்பித்து விட்டாரானால் அப்புறம் அந்தப் பேச்சு சங்கரன் கோவில் மாட்டுத் தாவணிக்குப் போய் விட்டுத் திரும்பிய போது வழிப்பறிக் கொள்ளைக்காரர்களைச் சமாளித்த தீரம் வரை சொல்லப்பட்ட பின்புதான் முடிவு பெறும். நடுவில் அவரை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. அவருடைய இந்தச் சுய புராணத்தைத் தப்பு என்றும் சொல்லி விட முடியாது. ‘நான் கண்ட மைசூர்’ என்ற தலைப்பில், ஒரு பிரயாணப் புத்தகம் எழுதவோ, கட்டுரைத் தொடர் வெளியிடவோ அவரால் முடியாமலிருக்கலாம். இப்படி வாய் வார்த்தையாகப் பேசிக் கொள்ளக் கூடவா அவருக்கு உரிமை கிடையாது?

“மைசூரில். இப்பொழுது நடக்கிறதே தசரா; தசராவா அது? குப்பை...! பார்த்திருந்தா அந்த நாளிலே தசராவைப் பார்த்திருக்கணும்…” என்று விநாயகம்பிள்ளை அவர்கள் வக்கணையாய்ப் பேசும் போது அந்த நாள் தசராவைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று நமக்கும் கூட வருத்தமாகத்தான் இருக்கும்.

நல்ல வேளையாக, அந்த நாள் தசராவைப் பார்த்து விட்டு, இந்த நாளிலும் நம் கண் காண இருக்கிற விநாயகம்பிள்ளையைப் பார்க்கும்போதே பழைய தசராவைப் பார்த்த திருப்தி ஏற்பட்டுவிடும், எனக்கு.

நான் இங்கு சொல்லியவற்றைத் தவிர இன்னும் எத்தனையோ சுவாரஸ்யமான அம்சங்கள் விநாயகம்பிள்ளையிடம் இருக்கின்றன. அவற்றை எல்லாம் தனித்தனியே விவரிக்க இயலவில்லையே என்பதில் எனக்கும் வருத்தம்தான். அப்படி விவரிக்க இந்த மாதிரி ஒரு சிறிய நடைச் சித்திரம் போதாது.

சுருக்கமாக ஒன்று சொல்ல முடியும் உயர்திருவாளர் விநாயகம்பிள்ளை அவர்கள் பாலமுருகன் மளிகை ஸ்டோர்ஸ் முதலாளி மட்டும் இல்லை. அவர் சுவையான கதாபாத்திரம். அவரே ஒரு கதை. அதில் ஒரே ஹீரோ அவர்தான். இன்னொரு ஹீரோவுக்கு இடமில்லை.

(1975-க்கு முன்)