பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135. மல்லிகையும் மருக்கொழுந்தும்

வைகறைப் பனியின் பூங்காற்று மெல்ல வீசிக்கொண்டிருந்தது. கீழ் வானம் இளஞ்சிவப்பில் முழுகி நீராடி மேலெழுந்தது போல விளங்கிற்று. காலை நேரத்தின் சக்தி அற்புதமானதாகத் தோன்றியது ரங்கநாதனுக்கு. அதுவும் அந்தக் கொள்ளிடங் காவேரிக் கரையில் நேரமும், இடமும் சேர்ந்து அவன் மனத்தில் மன நிம்மதியையும், சந்துஷ்டியையும் உண்டாக்குவதை நாள் தோறும் அவன் உணர்ந்துதான் இருந்தான். காலை நேரத்தில் பூக்கள் மலருவது போல மனங்களும் நாள் தோறும் மலரும்படியான மகத்துவம் இருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் மனம், காலத்தின் சுவடுகளில், நாட்கிளையின் அரும்பு போன்ற காலை நேரத்தைப் பற்றி இப்படி எண்ணுவதற்குக் காரணம் இருக்கத்தான் இருந்தது. அந்தக் காரணம்தான் அவனுடைய சொந்த வாழ்க்கை அனுபவம்.

மார்கழி மாதத்துப் பனியில் இப்படி அவனை நாள் தோறும் கொள்ளிடக் கரைக்கு வந்து போகச் செய்தது ஜானகியால் வந்த வினை என்றுதான் சொல்ல வேண்டும். அவன் மனமும் அவளைப் பொறுத்த வரையில் அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்திற்குத்தான் வந்திருந்தது. இவ்வளவு ஏன்? அவனை ஏகாங்கியாக்கி விட்டுத் துணிந்து சென்ற நெஞ்சுரம் அவளைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்?

அன்று தன் தகப்பனார் ஜகந்நாதாச்சாரியார், தானும் ஜானகியும் காதல் மணம் செய்து கொள்ளப் போவதை மறுத்து ஆத்திரத்தோடு பேசிய பேச்சு இப்போது கூட அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறார் போல இருந்தது. ஆனால், ஒரே ஒரு வேறுபாடு. அன்று அந்தப் பேச்சு, காதல் புரியும் இளம் ஆண் பெண்களைப் பயமுறுத்துவதையே கடமையாகக் கொண்ட தகப்பனார் வர்க்கத்தின் கொடிய சொற்களாக அவன் காதில் விழுந்தது. இன்றோ..? தகப்பனாரின் அந்த வார்த்தைகளில் விவரித்து உரைக்கத் தக்க அனுபவ உண்மைகள் கலந்திருப்பதாக அவனுக்கே தோன்றுகிறது. அன்று அவரை எதிர்த்தும், இரைந்து பேசியும் தான் கொண்டு விட்டதாகக் கருதியிருந்த வெற்றி மனக் கோட்டை இன்று தனக்கே முழுத் தோல்வியாக இடிந்து போனதை அவன் காண்கிறான்.

ஜானகி இப்படி மாறுவாள் என்று கனவில் கூட அவன் நினைத்தது இல்லை. ‘பி.ஏ. படித்த ஒரு பெண்ணிடம் காதலும், பெண்மையும் இருப்பதை விடச் சுதந்திர உணர்ச்சியும், அடங்காத இயல்பும் இவ்வளவு தூரம் அளவு கடந்து இருக்கும் என்று அன்றே தோன்றியிருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?’ என்று இப்போது அவன் எண்ணினான். “ரோஜாப் பூ அதன் செடியில் மலராக இருக்கும்போது காட்சிக்கும், நாசிக்கும் அளவுக்கு உட்பட்ட கவர்ச்சியைத் தருகின்றது.ஆனால், அதே