பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136. ஆனால்...?

'முல்லை மலர்' இலக்கிய மாதப் பத்திரிகையின் ஆசிரியர் வேங்கடரத்னம் தீர்மானமாக முடிவு செய்து விட்டார். அவரும்தான் மூன்று வருடங்களாக முயற்சி செய்து பார்க்கிறார். எல்லா ஏற்பாடுகளும் செய்த பின் கைக்கெட்டியது வாய்க் கெட்டாமற் போவது போல் கடைசி சந்தர்ப்பத்தில் பிரயாணம் நின்று போய் விடும். ஆனால், இந்த வருடம் எப்படியும் குற்றாலத்துக்குப் போயே தீருவது என்று உறுதியான தீர்மானத்தோடு பிரயாணத் தேதியும் குறிப்பிட்டு வைத்து விட்டார் அவர்.

“குற்றாலத்தில் பதினைந்து நாளாவது தங்குவேன். அதுவரை எல்லாம் உம்முடைய பொறுப்பிலேயே ஜாக்கிரதையாக நடத்தும். என்ன ராமசாமி, கவனமாகக் கேளும்! நம்முடைய அடுத்த தொடர் கதையை இந்தப் பதினைந்து நாட்களில் அங்கேயே முடிந்த வரை எழுதி விடலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். போன மறுநாளே கதையின் தலைப்பை உமக்கு எழுதி விடுகிறேன். இந்த மாத இதழிலேயே கடைசிப் பக்கத்தில் விளம்பரம் செய்து விடும்”

“ஆகட்டும் சார்!”-துணையாசிரியர் ராமசாமி அடக்கமாகப் பதில் கூறினார்.

“வந்து இன்னொரு விஷயம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. அந்தச் சுப்பராமன் எழுதிய நாவல், மதிப்புரைக்கு வந்தால் கொஞ்சம் பார்த்து எழுதும். அநேகமா இந்த இதழுக்குள்ளே புஸ்தகம் வந்து விடும்.”

“அதுக்கென்ன சார்? நீங்க இதைச் சொல்லவேண்டுமா என்ன? நம்ம சுப்பராமன்தானே? நானே பார்த்துச் செய்யறேன்.”

“அதுக்கு இல்லை ராமசாமி! உமக்கு ஞாபகப்படுத்தினேன். அவ்வளவுதான்.”

“புரூப்’களை ஒன்றுக்கு இரண்டு தடவையாகக் கொஞ்சம் கவனமாகப் பாரும்”

“----------”

“நாளைக்குத் தானே பன்னிரண்டாந் தேதி” “ஆமாம் சார்” .

“நாளைக்குச் சாயங்காலம் புறப்படலாம் என்று இருக்கிறேன்.”

“நல்லபடியாகப் போய் விட்டு வாருங்கள் சார்! இப்பொழுது சீஸனும் அருமையாக இருக்கும்.”

“கேமராவிற்கு பிலிம் ‘லோட்' பண்ணச் சொல்லி ராஜுவை அனுப்பினேன், அவனைக் கொஞ்சம் பார்த்து இங்கே அனுப்புமேன்.”