பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139. புகழ் என்னும் மாயை

டிக மணி நாவுக்கரசனுக்கு அன்று அப்படி ஒருவிநோதமான ஆசை ஏற்பட்டது. தன்னைப் பற்றி வெளியில் ஆண்களும்,பெண்களும்,சிறுவர்களும், சிறுமிகளும் என்ன பேசிக் கொள்கிறார்கள், எப்படிப் புகழ்கிறார்கள், எவற்றைத் தனது பெருமைகளாகச் சொல்லி வியக்கிறார்கள், எவற்றைத் தமது சிறுமைகளாகச் சொல்லி இகழ்கிறார்கள்என்றெல்லாம் தானே நேரில் கேட்டுத் தானே நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்போல நடிக மணிக்கு விந்தையானதொரு விருப்பம் உண்டாயிற்று.

நேரில் தம்மைச் சுற்றிலும் காதில் கேட்கிற கேட்ட-கேட்கும் புகழை அவர் நம்பத் தயாராயில்லை. பத்திரிகைகளும், நண்பர்களும் திறமைக்காக அல்லாமல், நட்புக்காகவும், தயவுக்காகவும் புகழுகிறார்களோ என்று நீண்ட நாட்களாக அவருடைய மனத்தில் ஒரு சந்தேகம் உறுத்தியது. தற்பெருமையையும், செல்வக்குவியலின் சுக போக வீறாப்பையும், எண்ணி எண்ணி மனத்திற்கே அந்த எண்ணம் சலித்துப் போய், ‘இன்னும் ஏதோ உன்னிடம் இல்லையே, ஏதோ குறைகிறதே’ என்று உள் மனமே தன்னை இடித்துக் காட்டி எதற்காகவோ தவிக்கும் சமயங்களில் எல்லாம் நடிக மணிக்கு இந்த ஆத்ம விசாரம் தவிர்க்க முடியாமல் உண்டாகும்.

“உண்மையாகவே இந்த உலகம் என்னைப் பற்றி என்னதான் நினைக்கிறது? என்ன பேசுகிறது? இவ்வளவு புகழையும், செல்வத்தையும் சுகபோகக் கட்டுக் காவலையும் கடந்து வந்து என் செவிகளை எட்டமுடியாத அபிப்ராயங்களுக்கும் என் கவனம் செலுத்தப்பட வேண்டுமல்லவா? ஆசையவலங்களும், பொறாமை போட்டிகளும், வறுமை வாட்டங்களும் மண்டிக் கிடக்கும் உயிருள்ள உலகத்தின் அழுக்கு நிறைந்த வீதிகளிலும், சந்துகளிலும், பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும், பயங்களற்ற தனிமையில், தயக்கங்களற்ற துணிவில் மனிதர்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள்? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?” நடிக மணியின் சிந்தனை புரண்டது. -

தன்னை யாரும் தெரிந்து கொள்ள முடியாமல், தான் எல்லோரையும், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடிந்த மாதிரியில் வெளியே ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வந்து விடவேண்டுமென்று தீராத தாகம் கொண்டார் அவர்.

அப்போது இரவு ஏழு மணி. அன்றிரவு ஒன்பது மணிக்கு ஏதோ ஒரு படப்பிடிப்புக்குக் ‘கால்ஷீட்’ இருந்தது. முதல் வேலையாக டெலிபோனை எடுத்து உடல் நலமில்லாததால் அன்று படிப்பிடிப்புக்கு வர இயலாதென்று ‘கால்ஷீட்’டை