பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141. பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது

மிஸஸ் மாத்யூ அந்தக் கான்வென்ட் பள்ளியிலிருந்து வெளியேறித் தனக்கென்றே சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்குவதென்று முடிவு செய்து விட்டாள். கன்னிமாடங்களையும், மத சம்பந்தமான நிறுவனங்களையும் சார்ந்து வேலை பார்ப்பதில் சொந்தமாக அதிக லாபம் சம்பாதிக்க முடியாமலிருந்தது. சேவை மனப்பான்மை என்பது மிஸஸ் மாத்யூவுக்கும், அவள் குடும்பத்தினருக்கும் என்றுமே ஒத்து வந்ததில்லை. அளவற்றுப்பெருகும்.ஆசைகளுக்கும்,சேவை மனப்பான்மைக்கும் பொருத்தமில்லாதிருந்தது. சேவை மனப்பான்மையால் வருமானம் ஒன்றும் பெருகவில்லை.

‘புதிய நர்ஸ்ரி பள்ளிக்கூடம், எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புக்கள் தொடங்கப்படும்’ என்று போர்டு மாட்டி விட்டு, நகரில் எந்த மூலையில் தொடங்கினாலும் சேருவதற்குக் குழந்தைகள் இருப்பார்கள் என்பதை மிஸஸ் மாத்யூ புரிந்து வைத்திருந்தாள்.

அரசியல்வாதிகள் இங்கிலீஷை எதிர்க்க, எதிர்க்க ஜனங்களிடம் தங்கள் குழந்தைகளுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வம் பெருகி வருவதையும் அவள் கவனித்திருந்தாள்.

தங்கள் வருமானத்தில் மிகவும் மேல் நிலையில் உள்ளவர்கள் உதகமண்டலம், கோடைக்கானல், கூனூர் என்று மலை வாசஸ்தலங்களில் இருக்கும் ஹாஸ்டல் வசதியோடு கூடிய ரெஸிடென்ஷியல் பள்ளிக்கூடங்களுக்குக் குழந்தைகளை அனுப்பிவிடுவார்கள். செலவைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.

மத்திய தர வருமானம் உள்ளவர்களும், குறைந்த வருமானம் உள்ளவர்களும் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, வேறு செலவுகளைக் குறைத்துக் கொண்டு தங்கள் குழந்தைகளை இங்கிலீஷ் படிக்க வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், மிஸஸ் மாத்யூ போன்றவர்கள் தெருவுக்குத் தெரு, பேட்டைக்குப் பேட்டை திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கும் நர்ஸ்ரி பள்ளிக்கூடங்களை விட்டால் வேறு வழியில்லை. பல பேர் இதே போல நடத்திக் கொண்டிருந்த நர்ஸரி பள்ளிகளில் எப்படி எல்லாம் பணம் பண்ணினார்கள் என்பதை மிஸஸ் மாத்யூ நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாள். சொல்கிற தொகைக்குக் கையெழுத்துப் போடவும், கொடுக்கிற தொகையை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக் கொண்டு போகவும் வாத்தியாரம்மாக்கள் தயாராகக் காத்திருந்தார்கள். வேலை கிடைத்தால் போதாதா?

மே மாதம் பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என்றால் பிப்ரவரியிலேயே, தான் தொடங்க இருக்கும் புதிய நர்ஸ்ரிப் பள்ளியைப் பற்றி விளம்பரம் செய்யத் தொடங்கியிருந்தாள் மிஸஸ் மாத்யூ.