1046
நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
ஒரே ஓலம், அலறல், அழுகை, கதறல், கண்ணீர், சாவு, ரத்தம், காயம், அடை மழை வேறு. நல்ல வேளையாகப் பிழைத்த குழந்தைகளும், மற்றவர்களும் வெளியேற்றப் பட்டுப் பத்திரமான இடத்துக்கு அனுப்பப்பட்டார்கள். காயமுற்றவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார்கள். ஆம்புலன்ஸும், தீயணைக்கும் படையினரும் வந்தனர். ஸ்கூல் காம்பவுண்ட் கதறல்களினாலும், ஓலங்களினாலும், துயரமும், கொதிப்பும், கொந்தளிப்பும் நிறைந்த ஜனங்களாலும் நிறைந்திருந்தது.
மிஸ்டர் மாத்யூவும், மிஸஸ் மாத்யூவும், அவள் தம்பியும் கீழே படியிறங்கி வந்தால் என்ன ஆகுமோ என்று பயந்து மாடியிலிருந்த ஆபீஸ் அறையிலேயே கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு விட்டார்கள். போலீஸும், ஆம்புலன்ஸும், தீயணைக்கும் படையினருமாகச் சேர்ந்து மாடியறைக் கதவைத் திறந்து, அவர்களைக் கீழே கொண்டு வந்து நிறுத்திய போது தன் குழந்தையைப் பறி கொடுத்த ரிக்ஷாக்காரன் ஒருவன் ஆத்திரம் தாங்காமல் தரையில் பூங்காவினிடையே ‘பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது’ என்று போர்டு எழுதி ஊன்றியிருந்த இரும்புச் சட்டத்தைப் பிடுங்கிக் கொண்டு அடிப்பதற்காக மிஸஸ் மாத்யூவின் மேல் பாய்ந்தான். அவன் கண்களில் அப்போது குரூரமான கொலை வெறி மின்னியது.
அப்போது நாகரிகமாக உடை அணிந்திருந்த ஒருவர் குறுக்கே பாய்ந்து அவன் கையிலிருந்த இரும்புச் சட்டத்தைப் பறித்து அவனைத் தடுத்தார். “அவசரப்படாதே. சட்டம் அவர்களைக் கவனித்துக் கொள்ளும்” என்றார். மிஸஸ் மாத்யூ நிமிர்ந்து பார்த்தாள். இப்படிச் சொன்னது வேறு யாருமில்லை. அந்தக் கல்கத்தா ஆசாமிதான். “உடம்பைச் செருப்பாக்கி உழைச்சிக் கிடைக்கிற கூலியிலே, பையனை இங்கிலீசு படிக்க வச்சுடணும்னு ஆசைப்பட்டேனே பாவி. இப்போ உலகத்தை விட்டே போயிட்டியேடா என் தங்கமே” என்று தடுக்கப்பட்ட அந்த ரிக்ஷாக்காரன் கதறிக் கொண்டிருந்தான்.
“பூக்களை விடச் சிரேஷ்டமானவற்றை எல்லாம் மிதித்து நசுக்கிக் கொன்ற பின், இங்கே இந்த போர்டு ஒரு கேடா?” என்று ஆத்திரத்தோடு கையிலிருந்த ‘பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது' என்ற போர்டைத் தலையைச் சுற்றி வீசி எறிந்தார் கல்கத்தாவிலிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்த அந்த மனிதர்.
அந்த போர்டுதோட்டத்தின் ஒரு பகுதியில் பூத்திருந்த பட்டு ரோஜாப் பாத்தியின் மேல் விழுந்து, பூக்களை எல்லாம் அழுத்திச் சின்னாபின்னமாக்கி விட்டுக் கிடந்தது. விழுந்த வேகத்தில் போர்டும், ஸ்டாண்டும் வேறு வேறாய்த் தனித்தனியே கழன்று போயிருந்தன.
(அமுதசுரபி, தீபாவளி மலர், 1978)