145. பின்னக் கணக்கில் தகராறு
எனக்குச் சந்தேகமாயிருந்தது. நேருக்கு நேர் கேட்டு விடலாம் போலவும் தோன்றியது. அப்படிக் கேட்பது நாகரிகமாகவும், நாசூக்காகவும் இருக்காதோ என்று தயக்கமாகவும் இருந்தது. மனசு குழம்பியது. இரண்டு மூன்று ஆபரேஷனுக்குப் பின் இப்போது எனக்குக் கண் பார்வை மங்கி விட்டது.
அந்த இடமோ புதுடில்லியின் ராஷ்டிரபதி பவன் அசோகா ஹால். இன்னும் சிறிது நேரத்தில் தேசம் முழுவதுமிருந்து வந்திருக்கும் பத்துத் தலை சிறந்த சமஸ்கிருத பண்டிதர்களைக் கெளரவித்து அவார்டு வழங்கும் விழா நடக்கப் போகிறது. விருது வழங்க வந்திருக்கும் கல்வி மந்திரியும், விசேஷமாக அழைக்கப்பட்ட பிரமுகர்களுமாக அசோகா ஹால் நிரமபியிருக்கிறது. ராஷ்டிரபதியின் வரவை எதிர்பார்த்துத் தேசிய கீதமும் அவர்களும் காத்திருக்கிறார்கள்.
முதலில் வரிசையில் விருது வாங்க வந்திருப்பவர்களின் அணியில் இடமிருந்து வலமாக மூன்றாவது அமர்ந்திருக்கும் அந்த மனிதரைப் பற்றித்தான் என் சந்தேகம். விருதுக்குரியவர்களின் பட்டியல் பத்திரிகையில் வந்திருந்தது.அந்தப் பட்டியலில் ‘ராம் மனோகர் ராவ்’ என்ற பெயரும் இருக்கத்தான் செய்தது.
இவர் அதே ராம் மனோகர் ராவ்தானா, வேறொருவரா என்பது தெரியவில்லை. முகமும் தோற்றமும் முதுமையால் மாற்றமடைந்திருக்கலாம். அல்லது உண்மையிலேயே இவர் வேறு ஒரு ராம் மனோகர் ராவாகவும் இருக்கலாம்.
யாராயிருந்தாலும், எனக்கு என் பழைய நண்பன் ராம் மனோகரின் நினைவு வராமலில்லை. நானும், அவனும் தஞ்சாவூர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் நாளிலிருந்தே சிநேகிதர்கள். பள்ளியில் இருந்து கல்லூரி வரை இருவருமே சமஸ்கிருத மாணவர்கள். சரஸ்வதி மகாலைச் சேர்ந்த சமஸ்கிருத பண்டிதர் ஒருவரின் மகனாதலால், வீட்டிலேயே கற்பித்துக் கற்பித்து இளவயதிலேயே அவனைச் சமஸ்கிருத மேதையாக்கியிருந்தார் அவனுடைய தந்தை.
பள்ளி நாளிலும் சரி, பிற்காலத்தில் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் இருவரும் சேர்ந்து படித்த நாளிலும் சரி, ராம் மனோகருக்குக் கணக்கு வராது, கணக்கைப் பிடிக்கவும் பிடிக்காது. -
ஒன்று, இரண்டு என்பது போல் முழு எண்களைக் கூட்டுவதிலும், கழிப்பதிலுமே தகராறு. கூட்டல் வரும் - முழு எண்ணைப் பொறுத்த வரை கழித்துப் பார்க்கத் தெரியாது அவனுக்கு. பின்னக்கணக்கு என்றாலோ, எதுவுமே வராது.பின்னப்படுத்திப் பார்ப்பதே அவனுக்குப் பிடிக்காது.