பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151. ஊமைக் காயம்

வளுடைய நூறாவது பட விழாவைக் கொண்டாட ஊரெல்லாம் ஆளுயரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பத்திரிகைகளில் அவளுடைய படங்கள், திரை உலக வரலாறு, துணுக்குகள், பெட்டிச் செய்திகள் எல்லாம் பெரிதாக அமர்க்களப்பட்டன.

நகரின் எல்லாத் திரையரங்குகளிலும் அவள் நடித்த படங்களில் ஏதாவது ஒன்று சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தது. எங்கும் அவள் மயமாயிருந்தது.

அந்த ஞாயிறன்று டெலிவிஷனில் சிறப்பு நிகழ்ச்சியாக அவள் நடித்த மிகச் சிறந்த படங்களின் தொகுப்புச் சித்திரம் ஒன்றை ஒளிபரப்ப ஏற்பாடு நடந்தது.

தினசரிகளும், வார இதழ்களும், பளீரென்று கவர்ச்சியாய்க் காட்சி அளித்த சினிமா இதழ்களும் டீப்பாயில் குவிந்து கிடந்தன. எல்லாவற்றிலும் அவள் படங்கள், புகழ் மாலைகள், சிறப்புக் கட்டுரைகள் சாதனையின் பெருமிதத்தில் மகிழ்ச்சி பொங்கித் ததும்பியது. அவள் களிப்பின் நிறைவில் இருந்தாள்.

“நடிகையர் ரத்தினம் குமாரி கலாதேவிக்குத் திருமணம் ஆகவில்லை என்றாலும், அவர் கலையையே மணந்து வாழ்க்கைப் பட்டிருப்பது, அவர் நடித்திருக்கும் இந்த நூறு படங்களிலிருந்து நிதரிசனமாகத் தெரிகிறது” என்றும் அவர் மணத்தையே மறந்து வாழ்கிறாள் என்றும் விளக்கி எழுதியிருந்தது ஒரு பத்திரிகை. அவளோ அதைப் படித்துச் சிரித்துக் கொண்டாள்.

“அம்மா ஜூஸ் தயார்” வேலைக்காரி செல்லம்மாள் அழகிய பூ வேலைப்பாடு அமைந்த கிளாஸ் நிறைய ஆப்பிள் ரசத்துடன் தட்டைக் கொண்டு வந்து வைத்தாள்.

கதாநாயகி நடிகை கலாதேவி பழரசத்தைப் பருகி. முடிக்கவும் வேலைக்காரி செல்லம்மா விடைபெற்றுக் கொண்டு போக வந்து நிற்கவும் சரியாயிருந்தது.

“வரேன்மா! தயிர் ‘பிரிஜ்’லே இருக்கு மத்த வேலையெல்லாம் முடிஞ்சிது!”

“ஏண்டி செல்லம்மா, என்னமோ இப்பத்தான் கல்யாணமான சின்னஞ்சிறிசு மாதிரி புருஷனுக்குப் பயந்து நடுங்கி வீட்டுக்கு ஓடறியே! ஒரு நாள்தான் கொஞ்சம் தாமசமாய்ப் போயேன்; குடியா முழுகிடும்?” -

“ஐயோ, என் புருஷன் பொல்லாதது. அடிச்சுக் கொன்னுடும். வூட்லே என்னைக் காணாட்டித் திரும்பவும் போயிச் சாராயக் கடையிலே பூந்துடும்.”

செல்லம்மாளின் குரலிலும், முகத்திலும் தெரியும் நடுக்கத்தையும், பயத்தையும் பார்த்துக் கலாதேவிக்கு வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. சிரிப்புக் கூட வந்தது.