பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152. கடைசியாக ஒரு வழிகாட்டி

ல்கலைக்கழக ரிஜிஸ்திரார் ஆபீசில் அவள் தெரிந்து கொண்ட தகவல் கவலையளிக்கப் போதுமானதாக இருந்தது. எதிர்காலமே இருண்டு போகும் போல் இருந்தது. விளக்கடியில் தேங்கி நிற்கும் இருட்டைப் போல ஒவ்வொரு பேராசிரியரிடமும் தேங்கியிருந்த விருப்பு வெறுப்புக்களும், பழி வாங்கும் மனப்பான்மையும், சுய சாதி அபிமானமும் பயங்கரமாயிருந்தன; அநாகரிகமாகவும் இருந்தன.

இப்போதைய இந்த வெள்ளத்தில் எதிர் நீச்சலிட்டுக் கரை சேர முடியுமா என்று பல போராட்டங்களை நடத்தியிருந்த அவளுக்கே மலைப்பாயிருந்தது. இத்தனை விருப்பு வெறுப்புக்களுக்கும், சூதுவாதுகளுக்கும், கள்ளம் கபடுகளுக்கும், குரோத விரோத மனப்பான்மைகளுக்கும் நடுவே கல்வி எப்படி வளர முடியும் என்று அவளுக்கே சந்தேகமாகக் கூட இருந்தது. அரசாங்கமே அங்கீகரித்திருந்த வகுப்புவாதப் பிரதிநிதித்துவ முறைகளைத் தவிர, ஒவ்வொரு பேராசிரியரும் தனியே தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப ஒரு பிரதிநிதித்துவ முறையை வைத்துக் கொண்டிருந்தார்.

“அந்தப் புரொபஸரா? அவருக்கு இன்ன இன்ன ஆட்களுக்குக் கெய்டாக இருக்கப் பிடிக்காது. ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக் கழித்து விடுவார்” என்று ஒருவரைப் பற்றிச் சொன்னார்கள்.

“இவரா? ஒவ்வொரு ஸ்டேஜிலும் ரிஸர்ச் ஸ்டூடண்டைப் பணம் கேட்பார். கொடுத்து மீள்வது கடினம்.”

“அவரா? ஆபத்தான பேர்வழி, பெண்கள் அவரிடம் போவது நல்லதில்லை. ஒரு மாதிரி சபல புத்திக்காரர்.” -

அவள் ஆராய்ச்சி செய்ய இருந்த துறையில் ‘கெய்டு’ ஆகப் பல்கலைக்கழகம் அங்கீகரித்திருந்த பேராசிரியர்களின் எண்ணிக்கையே நாலு, ஐந்துதான் இருந்தது. அவள் முழு நேர மாணவியாகக் கற்க விரும்பியதால், பல்கலைக்கழகம் ‘ரிஸர்ச் சென்ட்ட’ராக அங்கீகரித்திருக்கக் கூடிய ஒரு கல்வி நிறுவனத்தில் அங்கீகாரம் பெற்ற வழிகாட்டியாகக் கூடிய ஒரு பேராசிரியரைக் ‘கெய்டா’கக் கொண்டுதான் அந்த ஆராய்ச்சி செய்ய வேண்டும். .

இந்த நிபந்தனைகளாலும், படிக்கிற நாளில் பல்வேறு மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டு போதுமான அளவு கெட்ட பெயர் எடுத்திருந்ததாலும் அவளுக்கு இடமும், ‘கெய்டு’ம் கிடைப்பது சிரமமாக இருந்தது. சில இடங்களில்