பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153. ராஜ தந்திரிகள்

ந்த விருந்து அதற்காகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு செய்து அழைத்தவருக்கு நோக்கம் இருந்தது. அழைப்பை ஏற்று வந்தவருக்கும் அது இலைமறை காயாகப் புரிந்துதான் இருந்தது.

இவருக்கு அவரிடமிருந்து ஒர் இரகசியம் தெரிந்தாக வேண்டும். அவருக்கு அந்த இரகசியம் இவருக்குத் தெரியாமல் காப்பாற்றியாக வேண்டும்.

இவருடைய அழைப்பின் பேரில் அவர் வந்திருந்தார். சில ராஜ தந்திரக் காரணங்களுக்காக அந்த விருந்தை இவருடைய வீட்டிலோ, தூதரகத்திலோ தர முடியாமலிருந்தது. அவருக்கும், இவருடைய வீட்டுக்கோ, தூதரகத்திற்கோ வர முடியாத தர்ம சங்கடம் இருந்தது. ஆனால், இருவரும் சந்திக்க ஏற்பாடாகி விட்டது.

இருவரும் தூதரக வேலைகளுக்கு வந்திருந்த நாடு பல ஆயிரம் மைல்களுக்கு இப்பால் இருந்தது. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இந்த இரு தூதர்களுடைய நாடுகளும் அண்டை நாடுகள். இவர்கள் இன்று இருப்பதோ மற்றொரு பெரிய வல்லரசு நாடு.

அவருடைய நாடு வேறு ஒரு பெரிய நாட்டுடன் அணு ஆயுத உடன்படிக்கையோ அல்லது ‘நியூகிளியர் அம்பர்லா’ போன்ற ஓர் ஏற்பாடோ செய்து கொள்ளப் போவதாக அல்லது ஏற்கனவே செய்து கொண்டு விட்டதாக ஓர் இரகசிய தகவல் எந்த நாட்டுடன் அப்படி ஒப்பந்தம் அல்லது பாதுகாப்பு ஏற்பாடு உண்டாகி இருப்பதாகச் சொல்லப்பட்டதோ, அந்த நாட்டில்தான் அதன் தலைநகரில் இவர்கள் இருவரும் தங்கள் தங்கள் நாடுகளின் சார்பில் தூதர்களாக இருந்து வந்தார்கள்.

தலைநகரிலிருந்து நூறு மைல் தள்ளி இருந்த ஓர் ஆடம்பரமான பீச் ஹோட்டலின் லக்சுரி சூட் ஒன்றில் அந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேறு யாரும் அழைக்கப் படவில்லை. விருந்து இன்ஃபார்மல், ஃபிரண்ட்லி என்றெல்லாம் பரஸ்பரம் வர்ணித்துக் கொள்ளப்பட்டன. தங்கள், தங்கள் தூதரகங்களுக்கும் இந்த விருந்துக்கும் சம்பந்தமில்லை - இது பிரைவேட் - பியூர்லி பிரைவேட் - வீக் எண்ட் கர்ட்டஸி என்றெல்லாம் இளகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. நெகிழ்ந்த தொடர்கள் உபயோகப்படுத்தப் பெற்றன.

விருந்தைத் தொடங்கும் போது “யுவர் இன்ஃபர்மேஷன் கேன் எலோன் பிரேக் த ஐஸ்” என்ற இரகசியக் கேபிள் அவருடைய கோட் உள் பாக்கெட்டில் இருந்தது.