பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154. ஒரு நட்சத்திரத்தின் தோல்வி!

வள் ‘ஜோக்’ அடித்த போது எல்லோரும் சிரித்தார்கள். அவன் மட்டும் சிரிக்கவில்லை. ‘செட்’டில் அவள் நடுநாயகமாக அரசி போல் வீற்றிருந்ததையே அவன் பொருட்படுத்தியதாகவோ, இலட்சியம் செய்ததாகவோ கூடத் தெரியவில்லை.

அங்கிருந்த மற்ற எல்லாரும் புரொட்யூஸர், டைரக்டர் உட்பட அவள் கவனிக்க வேண்டுமென்று நினைத்த போது கவனித்து, சிரிக்க வேண்டுமென்று நினைத்த போது சிரித்து, பதற வேண்டுமென்று நினைத்த போது பதறி, உருக வேண்டுமென்று நினைத்த போது உருகி நடந்து கொண்டார்கள்.

‘மூட்அவுட்’ ஆகி அவள் ஒத்துழைக்க மறுத்தால், கிட்டத்தட்ட முக்கால் கோடி ரூபாய் முடங்கியுள்ள படம் மேலும் ரீலிசுக்குத் தாமதமாகி விடும்.அவளைப் போல ஒரு சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தன்னைக் கட்டிக் காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிலையில்தான் அவர்கள் எல்லாரும் இருந்தார்கள்.

அவள் மனம் வைத்தால், தன்னுடைய ஜோக்குக்குச் சிரிக்காத தன்னைப் பொருட்படுத்தாத அந்த இளைஞனை வேலையை விட்டே துரத்தி விட முடியும். அவன் ரொம்பவும் திமிர் பிடித்தவனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு பெண்ணிடம் - அதுவும் பல பேருடைய கனவுகளில் நிறைந்திருக்கும் ஓர் அழகிய சூப்பர் ஸ்டாரிடம் இப்படி அவன் அலட்சியமாக நடந்து கொள்ள முடியாது. கூடாது.

தன்னைப் பற்றி அதிகம் பொருட்படுத்தாத அந்த இளைஞனைப் பற்றி நடிகை விஜயநளினி அதிகம் பொருட்படுத்திச் சிந்தித்தாள். மனத்தை அலட்டிக் கொண்டாள். அவனைப் பற்றி யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.

“வாட்டர் ப்ரூஃப்’ கடிகாரத்திலே தண்ணி நுழையாத மாதிரிச் சில பேரோட மனசிலே ‘ஹ்யூமரே’ நுழையாது. அப்படிப்பட்டவங்களுக்கு ‘ஹ்யூமர் ப்ரூஃப்’னு அடைமொழி குடுத்திடவேண்டியதுதான்.” என்று அவன் காது படவே ஜாடையாக அவள் கிண்டல் செய்த போது கூட அங்கிருந்த மற்றவர்கள்தான் அதற்காக நகைத்தார்கள்.

அவன் பிடித்து வைத்த பதுமையைப் போல் கருமமே கண்ணாக, அன்றைய ஷூட்டிங்குக்கான ஸ்கிரிப்ட் கத்தையைச் சரி பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தான். அவ்வளவிற்கும். அவன் அதிக வயதானவன் கூட இல்லை. நல்ல உயரம், எடுப்பான நாசியோடு கூடிய முகம். கருந்திராட்சைக் குலைகளைத் தலையில் கவிழ்த்தாற் போலச் சுருள் சுருளாக முடி.