பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

672 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————

காயாம்பூ அடிக்கடி அவரிடம் கடன்வாங்கிக் கொடுக்கும் வாடிக்கையான ஆள்.மகன் மூலம் ஏதாவது வட்டிப் பணம் - பாக்கி கொடுத்தனுப்பியிருப்பான் என்றெண்ணிக் கொண்டுதான் பத்தர், நாகலிங்கத்தைத் தனியே அழைத்துச் சென்றார்.

“பத்தரே! அப்பா இதை உங்களிடம் கொடுத்துப் பணமாக மாற்றிக் கொண்டு வரச் சொன்னார், அவசரமாகச் செலவுக்கு வேண்டும்” என்று சொல்லி, அந்தப் பையன் நாகலிங்கம் எடுத்துநீட்டியபொருளைப் பார்த்தபோது, அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது.

அதைக் கையில் வாங்கி விளக்கு வெளிச்சத்தில் கொண்டுபோய் மேலும் கீழுமாகப் புரட்டினார். உற்றுப் பார்த்தார். இரத்தினப் பத்தரின் கைவிரல்கள் நடுங்கின. “தம்பீ! நாகு இதை உன் தகப்பனார்தான் கொடுத்துவிட்டாரா?”மனக் கலக்கத்தின் சாயையும், சந்தேகமும், பத்தரின் குரலில் தொனித்தன. அவர் விழிகளை இமைக்காமல் நாகலிங்கத்தைக் கூர்ந்து நோக்கினார். நாகலிங்கத்திற்குச் சரியாகப் பதில் சொல்ல வரவில்லை. உளறிக் குழறி வார்த்தைகளைப் பூசி மெழுகினான்.

“பரவாயில்லை தம்பீ! இங்கேயே இருங்க. வீட்டு வரை போய்ப் பணம் எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்” என்று நாகலிங்கத்தை அங்கே உட்கார வைத்துவிட்டுப் பட்டறையிலிருந்து இறங்கித் தெருவில் நடந்தார் இரத்தினப் பத்தர்.

நாகலிங்கத்திற்கு இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. பத்தர் கையோடு பதக்கத்தையும் கொண்டு போயிருந்தார். ‘பத்தருக்கு அது கோவில் நகை என்று தெரிந்திருக்குமோ? என்று அவன் மனத்தில் ஒரு பயப்பிரமை ஏற்பட்டது. இரத்தினப் பத்தர் இளமையிலேயே மதம் மாறியவர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தபின், அவர் பெருமாள் கோவிலுக்கு வந்திருக்கக் காரணமில்லை. அதனால் பெருமாளின் நகைகளைப்பற்றி அவருக்குத் தெரிந்திருக்க முடியாது!’ தனக்குத்தானே சமாதானமும் செய்துகொண்டான் நாகலிங்கம்.

இரத்தினப் பத்தர் போனவர், போனவர்தான். ஆள் திரும்பி வரவே இல்லை. ஆறேமுக்கால் மணிக்கு நகைப்பட்டறைக்குள் நுழைந்த நாகலிங்கம், ஏழே முக்கால் மணி வரை காத்திருந்தான். அதற்கு மேலும் அங்கே காத்திருக்கப் பொறுமை இல்லை அவனுக்கு ‘பத்தர் எங்கே ஒடிப்போய்விடப் போகிறார்? நாளைக்கு வந்து பணத்தை வாங்கிக் கொண்டால் போயிற்று.இங்கிருப்பவர்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம்’ என்று நினைத்துக் கொண்டு பட்டறையிலிருந்த வேலைக்காரனிடம், “பத்தர் ஐயா வந்தால், நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன் என்று சொல்லுங்கள்” என்று கூறிவிட்டுக் கிளம்பினான் நாகலிங்கம்.

நாகலிங்கம் இரத்தினப் பத்தரின் பட்டறையிலிருந்து புறப்பட்ட அதே நேரத்திற்குக் கோவில் வாசலில் சொக்கப்பனை விழாவைப் பார்ப்பதற்காகக் கோலாகலத்தோடு மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.

தரையில் உதித்த நட்சத்திரங்களைப் போல வரிசையாகத் தீபங்கள்; அவற்றிற்கு நடுவே ‘ஒளிகளுக்கெல்லாம் பேரொளியாயிருப்பவன் நான்’ என்று சொல்வதுபோல் நான்கு வீதிகளிலும் திருஉலாவை முடித்துக் கொண்டு பெருமாளின் பல்லக்கு வந்து